பணமே வேண்டாம்னு தூக்கிக் கொடுத்தார் ராஜா.. காபி ரைட் பிரச்னை.. இசைஞானிக்கு ஆதரவு.. இயக்குநர் அமுதன்
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் இசைஞானி இளையராஜாவிடம் அனுமதி கேட்காமல், அவரது இசையில் உருவான பாடல்களான, ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக் குருவி உள்ளிட்ட மூன்று பாடல்களை பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனுமதி பெறாமல் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக, ரூபாய் 5 கோடிகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக இசைஞானி இளையராஜாவின் வழக்கறிஞர் கூறும்போதும், மேற்குறிப்பிட்ட விஷயத்தை தெளிவாகச் சொன்னார். இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், ", குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களான, என் ஜோடி மஞ்சக் குருவி, ஒத்த ரூயாபும் தாரேன், இளமை இதோ உள்ளிட்ட பாடல்களுக்கு முறையான அனுமதியை சம்பந்தப்பட்ட கம்பெனிகளிடம் வாங்கி பயன்படுத்தியுள்ளோம். தடையில்லா சான்று வாங்கிய பின்னர் பாடல்களை திரைப்படத்தில் பயன்படுத்தினோம். எனவே நாங்கள் முறைப்படி தான் பாடல்களை பயன்படுத்தி உள்ளோம்" என தெரிவிக்கப்பட்டது.

விமர்சனம்: இசைஞானி தரப்பில் இருந்து இப்படியான வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதும், பலரும் இசைஞானியை பணத்திற்காக இப்படி செய்கிறார் என்று விமர்சித்தார்கள். திரைத்துறையிலும் கூட சிலர் விமர்சித்தார்கள். ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்ட தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜாவை சாடியே பதிவிட்டிருந்தார். காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா தனது பாடல்களை காப்புரிமை கேட்கும்போது மட்டுமே இளையராஜா மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் தங்களது பாடல்களுக்கான காப்புரிமை மற்றும் அதற்கான பணத்தை முன்னர் கேட்டுப் பெற்று வருகிறார்கள் என்ற பேச்சும் உள்ளது.

இயக்குநர் சி.எஸ். அமுதன்: இந்த விவகாரம் குறித்து பலரும் பேசி வரும் நிலையில், இயக்குநர் சி.எஸ். அமுதன் தனது ரத்தம் படத்தின் புரோமோசனுக்கு பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடலை அவரிடம் முறையாக கேட்டுப் பெற்றதாகவும், அதற்காக தங்களது தயாரிப்பாளர் பணம் தர தயாராக இருந்ததாகவும் ஆனால் இளையராஜா மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பணமே வேண்டாம்: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடந்த 2022ஆம் ஆண்டு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவுக்கு, பதில் அளிப்பது போல பகிர்ந்து கமெண்ட்டில் இளையராஜா குறித்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இசைஞானி இளையராஜாவின் ஒரு கூட்டுக் கிளியாக என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இயக்குநர் சி.எஸ். அமுதன் வெளியிட்டுள்ள பதிவில், " நாங்கள் இந்த பாடலைப் பயன்படுத்துவது தொடர்பாக ராஜா சாரின் குழுவினரை தொடர்பு கொண்டோம். மேலும் இந்த பாடலுக்கு அவருக்கு ராயல்டி தரவும் எங்கள் தயாரிப்பாளர் தயாராகத்தான் இருந்தார். ஆனால் ராஜா சார் பணம் எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டார். மேலும் பாடலை பயன்படுத்தவும் அனுமதி வழங்கினார். அவர் எதிர்பார்ப்பது பணம் இல்லை. என்னிடம் முறையாக தெரியப்படுத்துங்கள் என்பதுதான். ஒரு துறையாக நாம் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றால், வேறு யார் அதற்கு தகுதியானவர்?" என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இசைஞானி: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் கடந்த 49 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தனது 82வது வயதிலும் ஆண்டுக்கு குறைந்தது மூன்று படங்களாவது இசையமைத்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் தனது இசைக் கச்சேரிகளை நடத்தியும் வருகிறார். மேலும் சிம்பொனியும் அரங்கேற்றம் செய்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இவருக்கு அவரது ரசிகர்கள் தொடங்கி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் லண்டனில் இசைஞானி இளையராஜாவின் சிம்பொனியை நேரில் சென்று பார்த்தார்கள்.
பாராட்டு விழா: லண்டனில் இருந்து சென்னைக்கு திரும்பிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இசைஞானி இளையராஜா, சிம்பொனி இசையை யாரும் இணையத்தின் மூலம் கேட்க வேண்டாம். மேலும், அந்த இசையை அனைவரும் நேரில் கேட்கவேண்டும், அப்போதுதான் அந்த இசையின் மொத்த உணர்வ்வுகளையும் அனுபவிக்க முடியும் எனக் கூறினார். மேலும் லண்டனில் இருந்து வந்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து நன்றி கூறினார். வரும் ஜூன் 2ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் 83வது பிறந்த நாளில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விழா நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் இசைஞானிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிம்பொனியில் திரையிசை: இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசை குறித்து பேசும்போது, இந்த சிம்பொனி இசையை தான் முன்னரே எழுதி விட்டதாகவும், அவற்றை தற்போது உலகின் முன்னணி சிம்பொனி ஜாம்பவான்களிடம் கொடுத்து, அவை குறித்து கருத்து கேட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இவரது சிம்பொனியைப் பார்த்தவர்கள், இது பீத்தோவனுக்கு முந்தைய கிளாசிக் வகையைச் சேர்ந்தது எனக் கூறியதாகவும் கூறினார். லண்டனில் இவரது சிம்பொனி அரங்கேற்றம் முடிந்த பின்னர் தனது இசையிலான திரைப்பட பாடல்களின் பின்னணி இசையையும் அரங்கேற்றம் செய்தார். குறிப்பாக இதயம் போகுதே என்ற பாடலின் வரிகளைப் இளையராஜா பாடும்போது அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்கள் அனைவரும் கைகளைத் தட்டி, ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் இப்போதும் உலா வருகிறது.


Click it and Unblock the Notifications











