Gautham menon: யோவ் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்பய்யான்னு கேப்பாங்க.. கௌதம் மேனன் பளீச்!
சென்னை: நடிகர் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசுக்காக போராடிய நிலையில் அடுத்த மாதம் 24ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான விக்ரமை பார்க்க முடிகிறது.
துருவ நட்சத்திரம் பிரமோஷனில் இயக்குநர் கௌதம் மேனன்: நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணியில் கடந்த 2017ம் ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட துருவநட்சத்திரம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் என வெளியாகி மாஸ் காட்டிய நிலையில் பாதிக்கும் மேற்பட்ட சூட்டிங் நிறைவடைந்து படம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீசுக்காக தொடர்ந்து படக்குழுவினரிடம் கேள்வி கேட்டு வந்தனர்.
இந்தப் படத்தின் சூட்டிங்கை மீண்டும் கடந்த ஆண்டில் தூசித்தட்டிய கௌதம் மேனன், படத்தின் தயாரிப்பாளராகவும் மாறினார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து வரும் நவம்பர் 24ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக தீபாவளியையொட்டி படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
தங்கலான் படத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துவந்த விக்ரமிற்கு படத்தின் சூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு அவர் முழு ஓய்வில் இருந்தார். அந்த நாட்களை துருவ நட்சத்திரத்திற்காக அவர் செலவிட்டதாக கூறப்பட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் தங்கலான் படம் வெளியாகவுள்ள நிலையில், நவம்பரில் விக்ரமின் துருவ நட்சத்திரம் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் துவக்கியுள்ளனர். சமீபத்தில் இந்தப்படத்தில் இரண்டாவது பாடல் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. படத்தின் கதையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதா கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷும் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் பிரபல ஆங்கர் டிடிக்கு படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் கொடுத்துள்ள பேட்டியில் படத்தின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். படத்தில் ஜான் என்ற கேரக்டரில் விக்ரம் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக நடித்துள்ள நிலையில், அவருக்கான ஸ்டண்ட் காட்சிகளும் மிகவும் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளதாக கௌதம் மேனன் கூறியுள்ளார். மேலும் ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் வெற்றிபெறும் சூழலில் அடுத்த பாகத்தை உருவாக்கவும் தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தப் படம் குறித்து தனது பேட்டியில் பேசிய கௌதம் மேனன், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்ததாகவும், தான் ஏதாவது பேசினால்கூட யோவ் அதெல்லாம் இருக்கட்டும் துருவ நட்சத்திரம் குறித்த அப்டேட் சொல்லுய்யா என்றே தன்னிடம் ரசிகர்கள் கேட்பார்கள் என்று கௌதம் மேனன் டிடியுடனான அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விநாயகன் வித்தியாசமாக காட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது படங்களில் அதிகமாக நடித்துவரும் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெந்து தணிந்தது காடு படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தனது அடுத்தப்படம் குறித்து அறிவிக்காத நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படத்தை அதிகமாக எதிர்பார்த்து காத்துள்ளார். இந்தப்படம் சிறப்பான வெற்றியை கொடுக்கும் சூழலில் அவரது இயக்கத்தில் அடுத்தடுத்தப் படங்களை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











