சுமார் மூஞ்சி குமாரு.. சுமார் 6 கோடி மக்களுக்கு பிடித்த மனிதன்.. விஜய்சேதுபதியை பாராட்டிய கோகுல்!
சென்னை: தேசிய விருது பெற்ற நடிகர் விஜய்சேதுபதியை இயக்குநர் கோகுல் பாராட்டியுள்ளார்.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா என இரு படங்களை நடிகர் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியவர் கோகுல்.
இதற்குத் தான் ஆசைப்பட்டேன் நண்பா என அவர் பதிவிட்டுள்ள பாராட்டு ட்வீட் மக்கள் செல்வன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சுமார் மூஞ்சி குமாரு
நடிகர் தனுஷின் புதுப்பேட்டை படத்தில் சைடு ரோலில் நடித்த விஜய்சேதுபதி, ஏகப்பட்ட வருடங்கள் போராடி சினிமாவில் தற்போது தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இயக்குநர் கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சுமார் மூஞ்சி குமாரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களை ஹேப்பி ஆக்கினார் விஜய்சேதுபதி.

தேசிய விருது
பல முன்னணி நடிகர்களும் நடிக்க தயங்கும் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பாவாக கலக்கினார் விஜய்சேதுபதி. அந்த படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிருணாளினி, காயத்ரி என ஏகப்பட்ட நடிகைகள் நடித்திருந்தாலும், அவர்களை எல்லாம் ஓவர் டேக் செய்து அசத்தினார் விஜய்சேதுபதி.

காசு பணம் துட்டு மணி
நாம தான் ஹீரோவாகிட்டோமே என காசு, பணம், துட்டு, மணி, மணி என சூதுகவ்வும் ஸ்டைலில் வெறும் கமர்ஷியல் படங்களை மட்டுமே குறிவைக்காமல், நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள், நட்புக்காக கெளரவ வேடங்கள் மற்றும் வில்லனாகவும் ஏகப்பட்ட சோதனை முயற்சிகளை பரிசோதித்துக் கொண்டே இருக்கிறார்.

இதற்குத் தான் ஆசைப்பட்டேன் நண்பா
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது விஜய்சேதுபதிக்கு கிடைத்துள்ள நிலையில், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குநர் கோகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்குத் தான் ஆசைப்பட்டேன் நண்பா விஜய்சேதுபதி என மனமார பாராட்டியுள்ளார்.

6 கோடி மக்களுக்கு பிடித்த மனிதன்
மேலும், "சுமார் மூஞ்சி குமார் இன்று சுமார் ஆறு கோடி மக்களின் பிடித்தமான நடிகன் மட்டுமில்லை, பிடித்தமான மனிதன்.. விருதுகள் இனி விழுதுகள் போல் உன்னை சுற்றி... கோகுல் ஹாப்பி விஜய்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாராட்டு ட்வீட் மக்கள் செல்வன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

கொரோனா குமார்
நடிகர் ஜீவாவின் ரெளத்திரம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான கோகுல் இதற்குத் தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து காஷ்மோரா, ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தை தமிழில் அன்பிற்கினியாள் என ரீமேக் செய்துள்ளார். அடுத்ததாக கொரோனா குமார் படத்தை உருவாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











