Dhruvanatchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போ தெரியுமா.. கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!
சென்னை: நடிகர் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படம் தற்போது தூசி தட்டப்பட்டு, ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதுகுறித்து கௌதம் மேனன் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூலை 14ம் தேதி துருவ நட்சத்திரம் படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னமும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

அடுத்த மாதத்தில் ரிலீசாகும் துருவநட்சத்திரம் படம்: நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஸ்டைலிஷ்ஷான விக்ரமை பார்க்க முடிகிறது. கௌதம் மேனன் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்த அவர், இயக்கத்தில் கவனம் செலுத்தாத நிலையில் இந்தப் படம் முடங்கியதாக கூறப்பட்டது.
மேலும் கௌதம் மேனனுக்கும் விக்ரமிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக படம் முடங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் முழு முயற்சி மேற்கொண்டுள்ளார். படத்தின் புதிய ட்ரெயிலரை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியாக வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் சிறப்பாக அமைந்தது. கேங்ஸ்டர் படமாக வெளியான அந்தப் படத்தில் கௌதம் மேனனின் திரைக்கதை மற்றும் சிம்புவின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள துருவ நட்சத்திரத்திற்காகத்தான் ரசிகர்கள் தற்போது வெயிட்டிங்.

இந்தப் படத்தின் பேட்ச் வொர்க்குகளையும் சமீபத்தில் விக்ரம் முடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் படக்குழுவினர் முடித்துள்ள நிலையில், படம் இன்னும் ஒரு மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ரசிகர்களிடையே இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் தவறான நபர்களுடன் பணியாற்றியதால் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது துருவநட்திரத்தின் தயாரிப்பாளராகவும் தான் மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த 4 -5 மாதங்களாக துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீசுக்காக இரவு பகல் பார்க்காமல் தான் உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











