பா. ரஞ்சித், மாரி செல்வராஜை விடுங்க! பாரதிராஜாவும் மணிரத்னமும் ஜாதி படம் எடுக்கலயா?- கௌதமன் கேள்வி
சென்னை: தமிழ் சினிமா தளத்தில் மட்டும் இல்லாமல் அரசியல் தளத்திலும் நன்கு அறியப்பட்டவராக இருப்பவர் இயக்குநர் கௌதமன். நடிகர் முரளி மற்றும் சிம்ரன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான கனவே கலையாதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மகிழ்ச்சி படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். இதுமட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சந்தனக்காடு மற்றும் ஆட்டோ சங்கர் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு வரும் ஜாதிய படங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் ஜாதிப் படம் எடுப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால் பாரதிராஜாவும் மணிரத்னமும் கூட ஜாதிப் படங்கள் எடுத்துள்ளனர் எனக் கூறியுள்ளார். இது தற்போது மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

அந்த பேட்டியில், " ஒரு படைப்பாளி சாதியைப் பற்றிய படத்தினை எடுப்பது இன்றைக்கு மட்டும் இல்லை. நீண்ட நெடுகாலமாகவே இது இருந்து வருகின்றது. நீங்கள் மண் சார்ந்த கதைகளைச் சொல்கின்றீர்கள் என்றால் கட்டாயம் சாதியைச் சொல்லித்தான் ஆகவேண்டும். புறக்கணிக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு படைப்பாளி வந்து, அந்த சமூகம் குறித்து படம் எடுக்கின்றார் என்றால் அது நேர்மையானது மற்றும் அவசியமானது. அது எந்த சமூகமாக இருந்தாலும் சரி.

உரிமைக் குரல்: பாதிக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் கூக்குரல் எழுப்புகின்றார் என்றால், உரிமைக் குரலை எழுப்புகின்றார் என்றால் அது நியாயமானது. ஆனால் அதேநேரத்தில் மற்றொரு சமூகத்தை தாக்கித்தான் தன் சமூகத்திற்கான உரிமையைக் கேட்பது என்பது நேர்மையானது கிடையாது. ஒரு இனத்திற்கான படைப்பினைச் செய்தாலும் சரி, ஒரு இனத்தில் இருக்ககூடிய தனி சாதிக்கான படைப்பினைச் செய்தாலும் சரி. தன் சமூகத்திற்கான எழுச்சிக்காக படைப்பு எடுப்பது என்பது சரிதான்.

சிக்கல்: ஆனால் இங்கு என்ன சிக்கல் என்றால் என் இனத்திற்கான உரிமையைப் பேசுகின்றேன் என மற்ற சமூகத்தை தாக்கிப் பேசுவது என்பதுதான். இன்றைக்கு ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜை மையப்படுத்தி கேள்வி எழுகின்றது. இவர்கள் படைப்பு குறித்து திட்டி கமெண்ட் செய்பவர்கள் எல்லாம் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜால் பாதிக்கப்பட்டதாக நினைத்துக் கொள்கின்றார்கள். அதேநேரத்தில் அவர்கள் பாதிப்படையும் வகையில் நாம் படைப்பினை உருவாக்கியுள்ளோமா என பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் யோசிக்க வேண்டும்.

சாதியப் படங்கள்: பாரதிராஜா தேவர் சமூகத்தைச் சார்ந்த படங்களைச் செய்துள்ளார். பாலச்சந்தரும் மணிரத்னமும் பிராமண சமூகத்தைச் சார்ந்த படங்களை எடுத்துள்ளனர். இங்கு அனைத்து சமூகத்தை சார்ந்த படங்களும் வந்துள்ளது. ஒன்று அந்தந்த சமூகத்தில் இருந்து வந்து படம் எடுத்துள்ளனர். மற்றொன்று ஒரு வரலாற்றைத் தெரிந்து கொண்டு படம் எடுத்துள்ளனர். எப்போதும் ஒரு சமூகத்தின் மேன்மைக்காக படம் எடுக்கலாம். ஆனால் மற்ற சமூகங்களை குற்றம் சொல்லக்கூடாது.
அனைவரும் சமம்: இங்கு தெரிந்தும் தெரியாமலும் திட்டமிட்டும் திட்டமிடாமலும் ஒரு வன்மத்தை பாய்ச்சுகின்ற, பகிர்கின்ற, படைப்பாக்குகின்ற நிலை இருக்கின்றது. இது தொடர்ந்து கொண்டே உள்ளது. தமிழ் சமூகத்தில் யாரும் ஒருவரை விட உயர்ந்தவர் இல்லை. யாரும் ஒருவரை விட தாழ்ந்தவர் இல்லை. தமிழ் சமூகத்தில் பிறந்த அனைவரும் சமம்" என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











