தனுஷிடம் கதை சொன்ன துணிவு டைரக்டர்.. சதுரங்க வேட்டை மாதிரியான ஸ்டோரியாம்!
சென்னை : நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களை இயக்கி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார் இயக்குநர் ஹெச் வினோத்.
முன்னதாக ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படமே அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத்தந்தது.
சதுரங்க வேட்டை 2 படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், அதேபோன்ற சப்ஜெக்டில் ஹெச் வினோத் படத்தை இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சதுரங்க வேட்டை படம்
கடந்த 2014ம் ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை என்ற படத்தின்மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் ஹெச் வினோத். இந்தப் படம் பொதுமக்களை ஏமாற்ற எப்படியெல்லாம் திட்டமிடப்படுகிறது என்பதை மையமாக கொண்டு வெளியானது. பொதுமக்களை ஏமாற்ற முதலில் அவர்களின் ஆசையை தூண்ட வேண்டும் என்ற அடிப்படையையும் இந்தப் படம் சுட்டிக் காட்டியது. நட்ராஜ் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.

தீரன் அதிகாரம் ஒன்று படம்
தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தையும் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கினார் ஹெச் வினோத். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்தப் படமும் திரைக்கதை, காட்சி அமைப்புகள் உள்ளிட்ட சமாச்சாரங்களில் ரசிகர்களை கட்டிப் போட்டது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களில் வெற்றிப் படங்களை கொடுத்த ஹெச் வினோத் இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அடுத்தடுத்து அஜித்தின் 3 படங்கள்
இதையடுத்து அஜித்தை அடுத்தடுத்து மூன்று படங்களில் இயக்கும் வாய்ப்பு ஹெச் வினோத்திற்கு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என அடுத்தடுத்த படங்களை பிரபல தயாரிப்பாளர் போனிக்கபூர் தயாரிப்பில் இயக்கினார் ஹெச் வினோத். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சூப்பர் ஹிட்டடித்தன. சமீபத்தில் வெளியான துணிவு படம் அஜித் கேரியரில் சிறப்பாக அமைந்துள்ளது.

கமல் படத்தை இயக்கும் ஹெச் வினோத்?
இதையடுத்து கமல்ஹாசன், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரில் ஒருவரை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதில் கமலை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும் அந்தப் படத்திற்கு KH233 என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனுக்காக தான் ஒரு ஸ்கிரிப்டை தயாரித்துள்ளதாக அவர் கூறிய நிலையில், இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த பட்ஜெட்டில் கமல் படம்?
குறைந்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் தற்போது ஹெச் வினோத் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்திலும் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

தனுஷிற்கு கதை சொன்ன ஹெச் வினோத்
இதனிடையே தன்னுடைய மற்றொரு நேர்காணலில் பேசிய ஹெச் வினோத்திடம் சதுரங்க வேட்டை போன்ற படத்தை அவர் மீண்டும் இயக்குவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய ஹெச் வினோத், சதுரங்க வேட்டை போன்ற அதே கதையை தான் நடிகர் தனுஷிடம் கூறியதாகவும் இதுகுறித்து விரைவில் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதனிடையே தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் தன்னுடைய இயக்கத்தில் டி50 படத்தில் இணையவுள்ளார்.


Click it and Unblock the Notifications











