மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் ஏலே படத்தின் காப்பி... இயக்குநர் ஹலிதா ஷமீம் வேதனை!

சென்னை: மலையாளத்தில் மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், நண்பகல் நேரத்து மயக்கம் படக்குழுவினர் மீது, ஏலே பட இயக்குநர் ஹலிதா ஷமீம் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வரவேற்பைப் பெற்ற நண்பகல் நேரத்து மயக்கம்

வரவேற்பைப் பெற்ற நண்பகல் நேரத்து மயக்கம்

மலையாளத்தில் ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவரின் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது ஜல்லிக்கட்டு திரைப்படம் கடந்தாண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள நண்பகல் நேரத்து மயக்கம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

 இளம் இயக்குநர் குற்றச்சாட்டு

இளம் இயக்குநர் குற்றச்சாட்டு

திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் நண்பகல் நேரத்து மயக்கம் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஆக்‌ஷன், கமர்சியல் படங்களில் கவனம் செலுத்தி வந்த மம்முட்டி, இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார். மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், பூ ராமு உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டின் பழனி அருகேயுள்ள கிராமத்தில் தான் இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் ஹலிதா ஷமீம் குற்றம்சாட்டியுள்ளார்.

 ஏலே படத்தின் அழகியல் திருடப்பட்டது

ஏலே படத்தின் அழகியல் திருடப்பட்டது

பூவரசம் பீப்பி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். ஆந்தாலஜி கான்செப்ட்டில் இவர் இயக்கிய சில்லுக்கருப்பட்டி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் ஏலே படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படமும் நண்பகல் நேரத்து மயக்கமும் ஒரே கிராமத்தில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், தனது ஏலே படத்தின் அழகியலை நண்பகல் நேரத்து மயக்கத்தில் திருடியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 மகிழ்ச்சி என்றாலும் அயர்ச்சியை தருகிறது

மகிழ்ச்சி என்றாலும் அயர்ச்சியை தருகிறது

அதாவது, "ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார்செய்து அதில் அவர்களையும் நடிக்கவைத்து ஷூட்டிங் நடத்தினோம். அதே கிராமத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. ஆனால், நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் முழுவதும் இப்படம் முழுக்க திருடப்பட்டுள்ளது. அங்கே ஐஸ்காரர் என்றால் இங்கே பால்க்காரர். அங்கே செம்புலி என்றால் இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது." என பதிவிட்டுள்ளார்.

 நான் சும்மா இருக்க மாட்டேன்

நான் சும்மா இருக்க மாட்டேன்

மேலும், "நான் அறிமுகப்படுத்திய சித்திரை சேனன் நடிகர் -பாடகர், ஏலே படத்தில் நடித்த கலைக்குழு பாடகர் பாத்திரம் போலவே, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்மூட்டியுடன் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் காட்டப்படும் வீடுகள், பலமுறை பார்த்து பின் நான் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள். இதுபோல், இரண்டு படங்களையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன. எனக்காக நான்தான் பேச வேண்டும். தவிர்க்க முடியாமல், நானே பேச வேண்டிய சூழலில் இதைப் பதிவிடுகிறேன். நீங்கள் ஏலே படத்தை நிராகரிக்கலாம். ஆனால் என் சிந்தனையும், நான் தேர்வு செய்த அழகியலும் இரக்கமின்றி திருடப்படும்போது நான் அமைதியாக இருக்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 திரையுலகில் பரபரப்பு

திரையுலகில் பரபரப்பு

நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் கதையில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி வரும் ஜேம்ஸ், திடீரென சுந்தரமாக மாறுகிறான். அதுமட்டு இல்லாமல் சுந்தரத்தின் கிராமம், அவனது வீட்டில் சென்று அனைவரையும் திகைக்க வைக்கிறான். இந்த திகைப்பு படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் ஏற்படுவது உண்மையே. படத்தின் அழகியலை ரசிக்கும் அளவிற்கு, கதை என்னவென்பதை யூகிக்க முடியவில்லை. இப்படியான சூழலில், ஹலிதா ஷமிம் நண்பகல் நேரத்து மயக்கம் படக்குழு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X