யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
சென்னை: பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி என அழகான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய பெண் இயக்குநர் ஹலிதா ஷமீமின் அடுத்த படைப்பான ஏலே படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஐஸ் க்ரீம் வியாபாரியாகவும் அன்பு அப்பாவாகவும் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
சமுத்திரகனி கதாபாத்திரத்தின் மரணத்தை தொடர்ந்து நடக்கும் ஏகப்பட்ட விஷயங்களையும் ஏலே டிரைலர் தாங்கி வந்திருக்கிறது.

சாதிக்கும் பெண் இயக்குநர்கள்
ஆணாதிக்கம் மிகுந்த தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக ஏகப்பட்ட பெண்கள் தற்போது சாதித்து வருகின்றனர். அறிவும் படைப்பும் பாலினம் சார்ந்தது அல்ல என்பதை அகிலத்திற்கு ஆணித் தரமாக உயர்த்தி வருவதில் சிறந்த பங்காற்றி வருகின்றனர் சுதா கொங்கரா, ஹலிதா ஷமீம், புஷ்கரின் மனைவி காயத்ரி உள்ளிட்ட பலர்.

நான்கு நல்ல கதைகள்
நான்கு இயக்குநர்கள், ஐந்து இயக்குநர்கள் இணைந்து ஆந்தாலஜி படத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் ஹலிதா ஷமீம் சில்லுக்கருப்பட்டி எனும் படத்தையே நான்கு நல்ல கதைகளின் கோர்வையாக இயக்கி 2019ம் ஆண்டு இறுதியில் வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களையும் இனிக்கச் செய்தார்.

ஏலே எப்படி இருக்கு
ஹலிதா சமீமின் சில்லுக்கருப்பட்டி படத்தையே இப்போதும் பாராட்டுவோர்கள் சமூக வலைதளங்களில் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில், அவரது அடுத்த படைப்பான ஏலே படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது. டிரைலரை பார்த்தாலே இது அற்புதமான படைப்பு என்பது தெரிகிறது.

அப்பா சமுத்திரகனி
அறிவுரை சொல்லும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற சமுத்திரகனியே இந்த ஏலே படத்திலும் கதையின் நாயகன். குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் ஒரு அப்பாவின் மரணத்தில் நிகழும் விசயங்களையும், ஐஸ் விற்று அந்த அப்பா நம்மை எப்படி வளர்த்தார் என்பதை அசைபோடும் கதையாகவே ஏலே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நச் வசனங்கள்
சில்லுக்கருப்பட்டி படத்தில் இருந்ததை போலவே நச்சென்ற வசனங்கள் ஏலே படத்திலும் இருப்பது டிரைலரிலேயே கண்கூடாக தெரிகிறது. இன்னிக்கா? நாளைக்கா? என அப்பாவை இழந்த மகனிடம் கேட்கும் வயதான பெரியவரிடம் இன்னிக்கி. நீங்க எப்படி? என நக்கலடிக்கும் வசனம் மற்றும், யாரு எமனா? ரெண்டு மாசம் கழிச்சு வா.. கல்யாண வேலை எல்லாம் இருக்கு என சொல்லும் தாத்தாவின் வசனமாகட்டும் அருமை.

எப்போ ரிலீஸ்
ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், புஷ்கர் காயத்ரியின் வால் வாட்சர் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த ஏலே திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 12ம் தேதி திரைக்கு வருகிறது. ஹலிதா சமிம் இயக்கத்தில் சமுத்திரகனி, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











