இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி.. தீவிர காய்ச்சல்.. உடனிருந்தவருக்கு கொரோனா உறுதியானதால் பீதி!
சென்னை: பிரபல இயக்குநரான ஹரி தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோலிவுட்டின் ஆக்ஷன் இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஹரி. 2002ஆம் ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தொடர்ந்து சாமி, கோவில், அருள், அய்யா, ஆறு, தாமிரபரணி, வேல், வேங்கை, பூஜை என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

சிங்கம் சீரிஸ் படங்கள்
நடிகர் சூர்யாவின் கூட்டணியில் வெளியான சிங்கம் சீரிஸ் படங்கள், பெரும் ஹிட்டடித்தது. ஹரியின் படங்களில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. கடைசியாக அவரது இயக்கத்தில் சாமியின் சீக்வலான சாமி ஸ்கொயர் படம் வெளியானது.

ட்ரம் ஸ்டிக் புரடெக்ஷன்ஸ்
இந்நிலையில் தனது மைத்துனரான அருண் விஜய்யின் 30வது படத்தை இயக்குகிறார் ஹரி. இந்தப் படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள், இஃக்லூ படங்களை தயாரித்த ட்ரம் ஸ்டிக் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பிரியா பவானிசங்கர்
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா, ஜெயபாலன், ராஜேஷ், ராமச்சந்திர ராஜூ, யோகி பாபு புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதில் பிரியா பவானிசங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

தீவிர காய்ச்சல்
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த இயக்குநர் ஹரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹரிக்கு கொரோனா நெகட்டிவ்
இயக்குநர் ஹரியுடன் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஹரிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இருப்பினும் ஹரிக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டிருப்பது படக்குழுவினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











