Hari: சிங்கம் 3 டைம்லயே ஹரி சினிமாட்டிக் யூனிவர்சை யோசிச்சிட்டேன்.. ஆனா.. இயக்குநர் ஹரி ஓபன்!
சென்னை: இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ரத்னம் படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களை அடுத்தடுத்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் இயக்குனர் ஹரி. இந்தப் படம் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 17வது படம். இதையடுத்து தன்னுடைய முந்தைய படங்கள் குறித்தும் ரத்னம் குறித்தும் பல்வேறு விஷயங்களை அவர் பேசி வருகிறார்.
இதனிடையே ஹரி சினிமாட்டிக் யூனிவர்ஸ் குறித்து தான் சிங்கம் 3 நேரத்திலேயே யோசித்ததாக அவர் தனது பேட்டியொன்றில் பேசியுள்ளார். ஒரு படத்தின் ரிலீசுக்கு முன்னதாக பிரமோஷன்கள் செய்யப்பட வேண்டும் என்றும், தாங்கள் இப்படியொரு படத்தை உருவாக்கியுள்ளோம் என்று ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ரத்னம் படம்: இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியுள்ளது ரத்னம். இந்தப்படம் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் இயக்குனர் ஹரி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சாமி, சிங்கம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்துள்ள ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 17வது படம் ரத்னம். தொடர்ந்து ஆக்ஷன் படங்களை கொடுத்து வரும் ஹரி, இந்தப் படத்திலும் அதையே கையிலெடுத்துள்ளார். இந்நிலையில் தனது பேட்டியொன்றில் பேசிய ஹரி, இந்த தலைமுறையினருக்கும் ரத்னம் படம் பிடிக்கும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹரி: அநியாயத்தை தட்டி கேட்கும் படமாக ரத்னம் இருக்கும் என்றும் ஒவ்வொரு படத்திற்கும் பிரமோஷன் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். பிரசாரம் செய்தால் தான் மக்கள் வாக்களிக்கவே வருகின்றனர் என்று கூறியுள்ள ஹரி. அதேபோல நாங்கள் இப்படி ஒரு படம் எடுத்து இருக்கிறோம் என்றால் தான் மக்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப்படம் விறுவிறுப்பான படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் தானும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கியதாகவும் ஆனால் தன்னுடைய படங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் லாபத்தை கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப கமர்ஷியல் படங்களை இயக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கம் 4 குறித்து பேசிய ஹரி: இதனிடையே சூர்யாவை வைத்து தொடர்ந்து மூன்று பாகங்களாக சிங்கம் படங்களை எடுத்துள்ள ஹரி, நான்காவது பாகத்தை இயக்குவாரா என்று கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். நான்காவது பாகம் இயக்கினால் அது ரசிகர்களை கவருமா என்பது குறித்து தெரியவில்லை என்றும் ஆனால் போலீஸ் கதை ஒன்றை இயக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் ரத்னம் ரிலீசுக்கு பிறகு அந்த வேலைகளில் தான் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ஹரியிடம் அவரது ஆறுச்சாமி கேரக்டரும் துரைசிங்கம் கேரக்டரும் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஹரி சினிமாட்டிக் யூனிவர்ஸ்: இதற்கு பதிலளித்த ஹரி, இதைத்தான் முன்னதாக சிங்கம் 3 படத்தின் போதே யோசித்ததாகவும் விமானத்திலிருந்து ஆறுசாமியும் அவரது மனைவியும் இறங்கி வந்து துரைசிங்கத்திடம் பெருமாள் பிச்சை குறித்து பேசுவதாக தான் காட்சியை யோசித்ததாகவும் ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததால் விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த யுனிவர்சை லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் சிறப்பாக ஹாண்டில் செய்து வருவதாகவும் இந்த விஷயம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











