விஜய்யுடன் மீண்டும் கூட்டணியா.. இயக்குநர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட் இதோ!
சென்னை : ஜெயம் ராஜா தன்னுடைய தம்பியை வைத்து ஜெயம், தனி ஒருவன் என வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
கோலிவுட்டின் சிறப்பான இயக்குநராக இருக்கும் ஜெயம் ராஜா விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படம் சிறப்பான வெற்றியை விஜய்க்கு கொடுத்தது. இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய் தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெறவுள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனா ஜோடி
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் படத்தில் ராதிகா, குஷ்பூ, ஜெயசுதா, ஷாம், சரத்குமார், பிரபு உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், முன்னதாக படத்தின் அடுத்தடுத்த காட்சிகள், வீடியோக்கள் சமூக வலைதளங்கள்ல லீக்காகி அதிர்ச்சியை கொடுத்தது.

தளபதி 67 படத்தில் விஜய்
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்திற்காக இணையவுள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கேங்ஸ்டராக முதல் முறையாக நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.

விரைவில் அறிவிப்பு
படத்தில் சமந்தா, த்ரிஷா ஆகியோர் இணைந்துள்ளதாகவும், இவர்கள் இல்லை கீர்த்தி சுரேஷ்தான் நாயகி என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எதுவாக இருந்தாலும் இன்னும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அறிவிப்பு வெளியானவுடன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ராஜாவுடன் மீண்டும் விஜய்?
இந்நிலையில் இயக்குநர் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் நடிகர் விஜய் விரைவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாகவே கோமாளி படத்தின் பிரமோஷனின்போது ஜெயம் ராஜா மற்றும் விஜய் புதிய படத்தில் இணையவுள்ளதாகவும் ஆனால் தனி ஒருவன் 2 படத்தை இயக்கி முடித்த பின்பே விஜய் படத்தில் ஜெயம் ராஜா கவனம் செலுத்தவுள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.

விஜய்க்கு ஸ்கிரிப்ட் ரெடி
இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள ஜெயம் ராஜா, முன்னதாக விஜய்யுடன் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் தான் அப்போது ஸ்கிரிப்டை தயார் செய்யாததால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த லாக்டவுனில் தான் 7 ஸ்கிரிப்ட்களை தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அதனால் விரைவில் விஜய்யை சந்தித்து தான் கதை சொல்வேன் என்றும் ஜெயம் ராஜா தெரிவித்துள்ளார். தற்போது வாரிசு படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார். இந்நிலையில் தளபதி 68 படத்தை மோகன் ராஜா இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வேலாயுதம் படம்
முன்னதாக விஜய் மற்றும் மோகன் ராஜா இணைந்து வேலாயுதம் என்ற படத்தை கொடுத்திருந்தனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா, ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் விஜய்யின் வெற்றிப் படங்களின் வரிசையில் இணைந்தது. இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளது விஜய் ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான செய்தியாகவே அமையும்.


Click it and Unblock the Notifications











