ரஜினிகாந்த் ஒரு சுயநலவாதி.. கமல் பொதுநலவாதி.. ஓபனாக பேசிய இயக்குநர்
சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு பேருமே தமிழ் சினிமாவின் தூண்களாக இருப்பவர்கள். இரண்டு பேருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது சண்டையும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் குறித்து இயக்குநர் கே.ஆர் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
ரஜினியும், கமல் ஹாசனும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக நடித்துவருகிறார்கள். ரஜினியின் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படமும் அடுத்ததாக கூலி திரைப்படமும் வரவிருக்கிறது. அதேபோல் கமல் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 படமும் அடுத்ததாக தக் லைஃப் படமும் வரவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் கே.ஆர் ரஜினி மற்றும் கமல் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசியிருக்கிறார். அந்தப் பேட்டி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கே.ஆர். பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் ஒரு சுயநலவாதிதான். எப்போதும் வெல்ல வேண்டும்; தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் அந்த பணத்தை மீண்டும் எடுக்க வேண்டுன்; விநியோகஸ்தர்கள் வெல்ல வேண்டும் தனக்கு சம்பளம் சரியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும்தான் யோசிப்பார். அது அவருக்கு சரியாகப்படுவதால் அதனை அவர் செய்கிறார். உண்மையில் ஒரு நாளில் சில காட்சிகளை சுருக்கி எடுத்தால்கூட நல்லது என்றுதான் ரஜினிகாந்த் நினைப்பார்.
கமல் அப்படியல்ல: ஆனால் கமல் ஹாசனோ அப்படி இல்லை. அவர் தொடர்ந்து சோதனை முயற்சிகளை செய்துகொண்டே இருப்பார். அந்தப் படம் ஓடுகிறதோ ஓடவில்லையோ அவர் அவருக்கான பாணியிலிருந்து விலகவேமாட்டார். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் வெல்ல வேண்டும் என்பதிலும்; தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதிலும் முனைப்பாக இருப்பார் அவர். தமிழ் சினிமாவில் பல விஷயங்களை முதன்முறையாக செய்தது அவர்தான். பல விஷயங்களை அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.
அவரே செய்தார்: விக்ரம் படத்தின்போதும் அந்தப் படத்தை யாரும் தயாரிக்க முன்வரவில்லை. அவரே தனது ராஜ்கமல் நிறுவனத்தின் பேனரில் தயாரித்தார். ஒன் லைனையும் அவர்தான் லோகேஷ் கனகராஜிடம் கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் அதனை நன்றாக டெவலப் செய்து படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றினார். இப்படி ஒரு வாய்ப்பை லோகேஷுக்கு இயற்கை கொடுத்திருக்கிறது. கமலுக்கும் ரஜினிக்கும் போட்டியிருப்பது உண்மைதான்.
எப்படி உருவானது?: ஒருமுறை இரண்டு பேரையும் அழைத்த பஞ்சு அருணாச்சலம் நீங்கள் இரண்டு பேரும் தனித்தனியாக படங்கள் செய்யும் பட்சத்தில் நிறைய தொழிலாளர்கள் நன்றாக இருப்பார்கள். பொருளாதார நிலையும் பெருகும் என்று கூறினார். அதற்கு பிறகுதான் இரண்டு பேரும் பிரிந்து படங்களில் நடித்தார்கள். அவர்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் அவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











