Meena - என்னப்பா என் பொண்ண இப்படி பண்ணிட்டியே.. இயக்குநரிடம் புலம்பிய மீனாவின் தாய்
சென்னை: Meena (மீனா) முத்து பட ஷூட்டிங்கின்போது நடிகை மீனாவின் தாய் தன்னிடம் ரொம்பவே புலம்பிவிட்டார் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டில் பல கதாநாயகிகள் வந்திருக்கிறார்கள்.வரவிருக்கிறார்கள். ஆனால் மீனா எப்போதுமே எவர் க்ரீன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா பல படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு ராஜ்கிரண் நடிப்பில் உருவான என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி ஆனார்.
கனவுக்கன்னி மீனா: தமிழில் நுழைந்ததும் மீனாவை கோலிவுட் பலமாக வரவேற்த்தது. இதன் காரணமாக ரஜினி, கமல், அஜித், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக் என பல ஹீரோக்களுடன் நடித்தார். அவரது மழலை முகத்தையும், கொஞ்சும் குரலையும், திறமையான நடிப்பையும் பார்த்த ரசிகர்கள் அவரை தமிழ்நாட்டின் கனவுக்கன்னியாக ப்ரோமோட் செய்தனர். இன்றுவரை மீனாவுக்கான க்ரேஸ் இருக்கிறது என்றே சொல்லலாம்.

மீனாவின் தாய்: சிறு வயதிலிருந்தே மீனா நடிக்க ஆரம்பித்து சினிமாவின் சூது வாதுகளை தெரிந்துகொண்டார் என்பதைவிட அவரது தாய் மீனாவுக்கு அதையெல்லாம் சொல்லிக்கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அரணாக மீனாவுக்கு பல வருடங்களாக இருந்தவர் அவர். இதன் காரணமாக மீனா மீது திரையுலகினர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கின்றனரோ அதே அளவு மீனாவின் தாய் ராஜமல்லிகா மீதும் வைத்திருக்கின்றனர்.
பேசவே விடமாட்டார்: சமீபத்தில் மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய பிரபுதேவாக்கூட ஒரு ஷூட்டிங்கில் ரொம்ப நாட்கள் கழித்து மீனாவிடம் ஹாய் சொன்னேன். ஹாய் என்று பதில் வந்தது. ஆனால் மீனாவின் வாய் அசையவில்லை. அவருக்கு முன்னதாகவே அவரது தாய் எனக்கு ஹாய் சொன்னார். அப்படி பொத்தி பொத்தி மீனாவை பாதுகாத்தார் என்று கூறியிருந்தார். அவர் மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே மீனாவின் தாயை ஏகத்துக்கும் புகழ்ந்தனர்.
கே.எஸ்.ரவிக்குமார்: இந்நிலையில் மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், "மீனாவை பற்றி பேசுவதற்கு முன்னதாக அவரது தாய் பற்றி பேச வேண்டும். முத்து படத்தின் அவுட்டோர் ஷூட்டிங், ப்ளாஷ்பேக் காட்சிகளை முதலில் மைசூரில் ஷூட் செய்தோம். அந்த போர்ஷனில் மீனாவுக்கு வேலை இல்லை. மாறாக சரத்பாபுவுடன் வரும் இன்னொரு ஹீரோயிந்தான் நடித்துக்கொண்டிருந்தார்.
புலம்பிய மீனா தாய்: இதை பார்த்துக்கொண்டிருந்த மீனாவின் தாய் என்னிடம் வந்து, ஏன்ப்பா நாட்டாமை படத்தில் நீதான் மீனாவுக்கு சூப்பரான ரோல் கொடுத்த. முத்து படத்துல அவரை செகண்ட் ரோலாக போட்டிருக்கியே. என்னப்பா இப்டி பண்ணிட்ட என்றார். அதன் பிறகு தமிழ்நாடு வந்து அரண்மனையில் ஷூட்டிங் செய்துகொண்டிருந்தபோதும் என்னிடம் வந்து என்னப்பா செந்தில்,வடிவேலு, விசித்திரா எல்லாரும் இருக்காங்க. இந்த கும்பலுல என் பொண்ணு காணாமப்போயிடுவா என சொன்னார். அதற்கு நான் என் மேல் நம்பிக்கை இருந்தா அமைதியா இருங்க என்று சொல்லிவிட்டேன்.
எப்போ வேணாலும் டேட்: மீனாவுக்கு இந்தப் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது என படம் பார்க்கும்வரை அவர் நம்பவில்லை. படத்தை பார்த்துவிட்டு என்னிடம் இனி எப்போ டேட் கேட்டாலும் நாங்க கொடுத்துடுறோம் என மீனாவின் தாய் சொன்னார். அதன்படிதான் தெனாலி படத்தில் சில நிமிட காட்சிக்கும், நட்புக்காக படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கும் மீனாவின் டேட்ஸ் கிடைத்தது. அப்படி மீனாவின் தாய் அவ்வளவு சிறப்பானவர். மீனாவிடம் இருக்கும் ஒரே மைனஸ் என்னவென்றால் அவர் எவ்வளவு கோபப்பட்டு நடித்தாலும் அதை நம்மால் உணர முடியாது. ஏனென்றால் அவரது முகம் அவ்வளவு மழலைத்தன்மை வாய்ந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











