குரங்கு பெடல் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது ஏன் தெரியுமா? இயக்குநர் பேட்டி!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புராடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்திற்கு குரங்கு பெடல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க முக்கிய காரணம் இதுதான் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகராக கலக்கி வந்த சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜின் இயக்குனராக அறிமுகமான கனா படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறினார். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்தபடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், டான் என அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார்.

குரங்கு பெடல்: சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தற்போது சூரி நடித்து வரும் கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் குரங்கு பெடல் என்ற படத்தை தயாரித்துள்ளார். மதுபானக் கடை மற்றும் வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமல்கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில், காளி வெங்கட் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். குழந்தைகளை மையப்படுத்திய உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.
காரணம் இதுதான்: இந்நிலையில், குரங்கு பெடல் படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன் பேசும் போது, சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவன் தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. 80 மற்றும் 90 களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் கற்றுக்கொள்வது வழக்கம். இது அதைச் சுற்றிப் பேசும்படம் என்றாலும் அந்தக் காலகட்டத்தை நினைவுபடுத்தும் படமாகவும் இது இருக்கும். காவேரி கரையோரத்தில் கத்தேரி என்ற கற்பனை கிராமத்தில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான தொடர்பை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் கொடுக்கும். பல்வேறு பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தைப் பார்த்து பாராட்டிய அவர், தானே வழங்குவதாக அறிவித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றார்.
சிவகார்த்திகேயனின் அமரன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த அயலான் படம் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் தயாராகி வருகிறது.
SK23: நடிகர் சிவகார்த்திகேயன்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அமரன் படத்தை தொடர்ந்து, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் SK23 ஆகிய இரு படங்களில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











