Jigarthanda Double X: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இணைந்த ரெட் ஜெயண்ட்.. என்னன்னு பாக்கலாங்களா?
சென்னை: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா போன்றவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அவரது இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
ஜிகர்தண்டா 2 படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம்: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் வெளியான ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசந்தரம் போன்றவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். நடிகர் விஜய் சேதுபதியும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அசால்ட் சேது கேரக்டரில் பாபி சிம்ஹா கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கியிருந்த கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தை அவரே தயாரித்தும் உள்ளார். கடந்த 1975ம் ஆண்டையொட்டிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இந்தப் பாடலை தன்னுடைய மகள் தீயுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளரான எஸ்ஜே சூர்யா மற்றும் கேங்ஸ்டர் லாரன்ஸ் இடையில் நடக்கும் சம்பவங்களை இந்தப் படம் மையமாக வைத்து உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து நடிகர் லாரன்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டவர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளனர். வழக்கமாக முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களின் தமிழக வெளியீட்டு உரிமைகளை ரெட் ஜெயண்ட் கைப்பற்றிவரும் சூழலில் ஜிகர்தண்டா 2 படத்தின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் லாரன்ஸ், இந்தப் படத்தின் முதல் பாகத்திலேயே நடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை தான் தவறவிட்டதாகவும் ஆனால் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்தப் படத்தில் நடிக்க கிடைத்த சான்சை தவறவிட்டாலும் தற்போது 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்துள்ளது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











