Jigarthanda XX: தொடர்ந்து மாஸ் காட்டும் ஜிகர்தண்டா XX.. சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியையொட்டி கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் வெளியானது ஜிகர்தண்டா XX.
ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் 4 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது.
வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படத்தின் மேக்கிங் ரசிகர்களை கவர்ந்தநிலையில் தற்போது படம் வெற்றிப்படமாகியுள்ளது.

ஜிகர்தண்டா XX படம்: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 10ம் தேதி தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது ஜிகர்தண்டா XX படம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் காடுகளைப் பற்றிய புரிதலை ரசிகர்களிடம் கடத்தியது. காட்டில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் சிக்கல்களையும் எடுத்துக் காட்டியது. தற்போது 3 வாரங்களை கடந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய லாரன்ஸ்: பேய் படங்களில் நடித்து ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திவந்த ராகவா லாரன்சிற்கு இந்தப் படம் வித்தியாசமான அறிமுகத்தை கொடுத்துள்ளது. தனக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். இதேபோல வழக்கம்போல இந்தப் படத்திலும் நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளார் எஸ்ஜே சூர்யா. நிமிஷா உள்ளிட்டவர்கள் மட்டுமில்லாமல் காடுகளில் வாழும் பழங்குடியின மக்களையும் இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.
புதிய டீசர்: இந்நிலையில் இந்தப் படம் 3 வாரங்களை கடந்த நிலையில் படத்தின் புதிய டீசரை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். காடுகளில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து சினிமாவின் மேஜிக் குறித்தும் இந்த டீசர் விவரிக்கிறது. இந்த டீசரை வெளியிட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், யானைகள் மற்றும் சினிமா மீதான மக்களின் அன்பிற்கு கோடானு கோடி நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார். வெற்றியை கொண்டாடும்வகையில் இந்த டீசர் அமைந்துள்ளது.

சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூல்: இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் சர்வதேச அளவில் தற்போது 60 கோடிகளை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தில் மட்டுமே ஜிகர்தண்டா XX படத்தின் வசூல் 40 கோடிகளை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும்நிலையில் இந்த வசூல் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

ஜிகர்தண்டா படத்தின் 3வது பாகம்: கடந்த 2014ம் ஆண்டில் ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகம் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியானது. இந்தப் படம் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் படத்தின் 3வது பாகம் குறித்தும் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











