புதிய முயற்சியை ஆதரித்ததால்தான்… நான் இயக்குனரானேன்.. கார்த்திக் சுப்புராஜ்
சென்னை : புதிய முயற்சிகளை ஆதரித்ததால் தான், நான் இயக்குனராக இருக்கின்றேன் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். அவர் புதியதாக அல்லி என்னும் சுயாதீனப்படத்தை தயாரித்து வருகிறார்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் நுழைந்து தற்போது மிகப்பெரிய இயக்குனராக மாறி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா, ஜிகர்தண்டா படத்தின் மூலம் திரைத்துறையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பிறகு, சுப்புராஜ் மேயாத மான் மற்றும் மெர்குரி படங்களை தயாரித்துள்ளார். இவர் ரஜினியின் பேட்டைப்படத்தை இயக்கி டாப் இயக்குனர்களின் வரிசையில் வந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்தப் பிறகே இவரால் திரைத்துறையில் கால் பதிக்க முடிந்தது. இதுபோன்ற நிலை மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்பதற்காக ஸ்டோன் பென்ஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் கார்த்தி சுப்புராஜ். நண்பர்களுடன் இணைந்து குறும்படம், இணைய தொடர்களை தயாரித்து வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் தற்போது அல்லி எனும் சுயாதீன படத்தை தயாரித்துள்ளார். செக்ஸி துர்கா எனும் மலையாளப்படத்தை இயக்கிய சனல் குமார் அல்லி படத்தை இயக்க உள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ். புதிய கலைஞர்களின் படைப்பை ஆதரித்ததால்தான், நான் இன்று இயக்குனராக ஆனேன். அதனால் தான் நானும் ஸ்டோன் பென்ஞ்ச் மூலம் பல புதிய முயற்சிகளை ஆதரித்து வருகிறேன். அல்லிப்படம் தான் தமிழில் முதன்முறையாக வெளியாகப்போகும் சுயாதீனப்படம் என்று கூறினார்.
இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது ஆனால் படவிழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் மட்டுமே வெளியாகும் என்றார். இப்படத்தில் பாடல்கள், நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் என்று எந்த ஒரு விசயமும் இருக்காது படம் முழுவதும் மிக எதார்த்தமாக தான் இருக்கும். இந்த படம் எடுக்க எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லை என்று கூறினார் கார்த்திக் சுப்புராஜ்.
ஒரு காதலனுடன் ஊரைவிட்டு செல்லும் பெண் வழியில் சந்திக்கும் பிரச்சினையே செக்ஸி துர்கா படத்தின் கதை, அதை மிகவும் ஆழமாகவும், அழகாகவும் சொல்லி இருப்பார் இயக்குனர் சனல் குமார். அதே போல, அல்லியும் ஒரு பெண்ணின் பயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது தான் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.


Click it and Unblock the Notifications











