தனுஷின் அப்பா பாராட்டியதால் என்ன நன்மை வந்துவிடும்?.. யோசியுங்கள்.. சீனு ராமசாமிக்கு கரு.பழனியப்பன் கடிதம்
சென்னை: பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்கள் எல்லாம் பெரும் பாராட்டை பெற்றவை. சூழல் இப்படி இருக்க அவரது இயக்கத்தில் கடைசியாக கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தச் சூழலில் அவருக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் எழுதியிருக்கும் கடிதம் ட்ரெண்டாகியிருக்கிறது.
தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் சீனு ராமசாமி. அந்தப் படம்தான் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான முதல் படம். மிகப்பெரிய வெற்றி படமாக மாறி அந்தப் படத்துக்காக வைரமுத்து தேசிய விருதையும் வென்றார். அதனையடுத்து சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. முக்கியமாக தர்மதுரை திரைப்படம் அவரது கரியரில் தி பெஸ்ட் படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது.

கோழிப்பண்ணை செல்லதுரை: அதேபோல் சீனு ராமசாமியும் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில் அவரது இயக்கத்தில் கடைசியாக கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் வெளியானது. அதில் பிரிகிடா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் இயக்குநர் கரு. பழனியப்பன் சீனு ராமசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
பழனியப்பனின் கடிதம்: அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், "இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கு. கடந்த ஒரு மாதமாய் கண்டவிடத்தில் எல்லாம் 'அண்ணே கோழிப்பண்ணை செல்லதுரை' படம் பார்த்தீர்களா? பார்த்துவிட்டு நான்கு வரிகள் நல்லதாக முகநூலில் எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். கல்லூரி காலத்திலிருந்தே நாம் இருவரும் ஒருவரையொருவர் அறிவோம் என்றாலும் இதுவரை நாம் கடிதம் எழுதிக்கொண்டதில்லை.
முதல் கடிதம்: இதுவே முதல் கடிதம். கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அரங்க வெளியீட்டின்போது வெற்றி பெறவில்லை என்றாலும் ஓடிடி வெளியீட்டுக்கு பிறகு பலரும் தங்களை பாராட்டுகிறார்கள். அதை தாங்களும் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்கின்றீர். நிற்க. உங்களை பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் கோழிப்பண்ணை செல்லதுரை போல குறைகளுடன் கூடிய படைப்பை கோபுரத்தின் மீது வைத்து பாராட்டுவது என்பது அவரது பண்பை காட்டுகிறது.
பயணத்தை தடை: அதை நமக்குரியது என நினைத்து ஏற்றுக்கொள்வது நம்முடைய பயணத்தை தடை செய்யக்கூடும். சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்லக்கூடிய தூரமும் அடையக்கூடிய உயரமும் அளப்பரியது. இந்தக் குழந்தை பாராட்டுக்களில் குதூகலித்து தேங்கி நின்றுவிடாதீர்கள். நடிப்பின் அசுரன் தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி தங்களுக்கு எழுதியிருந்த பாராட்டை பகிர்ந்திருந்தீர்கள். நல்லது. மகிழ்ச்சி.
இதனால் என்ன நன்மை: தனக்கு அடுத்த தலைமுறை இயக்குநர்களின் மேல் கஸ்தூரி ராஜா காட்டும் அன்புதான் அது. இதனால் என்ன நன்மை விளையும் என்று நன்றாகவே யோசித்து பாருங்கள். முகம் தெரியாத ஒரு ரசிகன் நம் படைப்படை ரசித்து ஆரவாரித்து கொண்டாடி வெற்றி பெற செய்ய வேண்டும். அது நிகழும்போது முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நம்மோடு கைகள் கோர்த்து அடுத்த படம் செய்ய வருவார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்தானே. தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களுக்கு மேலாக சிறந்த படைப்பையும் மேலான வெற்றியையும் உங்களது அடுத்த படம் அடையட்டும். எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் கரு. பழனியப்பன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











