Manobala Death - என்னால முடியலடா.. மனோபாலாவின் கடைசி தருணங்கள் - கதறும் இயக்குநர்
சென்னை: Manobala Death (மனோபாலா மரணம்) மனோபாலா கடைசி படத்தில் நடித்தபோது அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து படத்தின் இயக்குநர் கதிர்வேலு தெரிவித்திருக்கிறார்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்த மனோபாலா டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். அதன் பிறகு ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கிய அவர் தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றி இயக்குநராக வலம் வந்தார்.

முழு நேர நடிகர்: இயக்கத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் கொண்ட மனோபாலா இதுவரை 345 படங்களில் நகைச்சுவை, குணசித்திர கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். பிதாமகன் படத்தில் லைலாவிடம் அவர் பேசும், 'நீ உருட்டுமா உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்ப' என்ற வசனம் இன்றுவரை மீம் மெட்டீரியலாக சுற்றிவருகிறது. பல படங்களில் அவரது உடல்மொழியும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன.
தயாரிப்பாளராக வென்ற மனோபாலா: இயக்கம் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்திய அவர் சதுரங்க வேட்டை என்ற தரமான படத்தை தயாரித்து ஹெச்.வினோத் என்ற தவிர்க்க முடியாத இயக்குநரை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் மட்டுமின்றி சதுரங்க வேட்டை 2, பாம்பு சட்டை படங்களையும் தயாரித்திருக்கிறார். இவற்றில் சதுரங்க வேட்டை 2 படம் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மனோபாலா: இந்தச் சூழலில் சில படங்களில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருந்த மனோபாலா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துவந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று எல்.வி.பிரசாத் சாலையில் இருக்கும் அவரது வீட்டில் உயிரிழந்தார். சாலிகிராமத்தில் தற்போது வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவிருக்கிறது.
கடைசி படம்: மனோபாலா கடைசியாக கோஸ்டி என்ற படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்திலும் அவர் கமிட்டாகியிருக்கிறார் என்றும், அதற்குள் இந்த துக்க நிகழ்வு நடந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் நடித்த கடைசி படத்தின் இயக்குநர் கதிர்வேலு, மனோபாலா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

என்னால முடியலடா: அந்த ட்விட்டர் பதிவில் அவர், "கடைசியாக படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே"என்னால முடியலடா! மருத்துவமனைக்கு போய் வருகிறேன் என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா?கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா?" என விரக்தியுடன் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் கதிர்வேலு ஏற்கனவே ராஜவம்சம் படத்தை இயக்கியிருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் சாம்ஸ் ட்வீட்: அதேபோல் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் அந்த வீடியோவை பகிர்ந்து, மனோ பாலா சாரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. நண்பர் கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோ பாலா சாருடன் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக இருக்கும். அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











