சொல்ல வேண்டியதை ரசிக்கும் படியா சொல்றோம்... பற இயக்குனர் பாய்ச்சல்
சென்னை: பற, ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட படம் என்று இயக்குனர் கீரா சொன்னார்.
கீரா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம், 'பற'. சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, அஷ்மிதா, சாந்தினி, சாஜூமோன், முத்துராமன் உட்பட பலர் நடித்துள்ளனர். விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளனர். சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லெமுரியா மூவிஸ், வி5 மீடியா, மற்றும் வர்ணலயா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன், மூர்த்தி ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பு செய்கிறார் எஸ்.பி. முகில்.
இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. சினேகன் எழுதிய, உன்பேரை எழுதி வச்சேன் என்ற பாடல் ஹிட்டடித்துள்ளது.
படம் பற்றி கீரா கூறும்போது, ஆணவக்கொலைகள் அச்சுறுத்தி வரும் வேளையில் இந்தப் படம் வெளிவருவது தேவையான ஒன்றாக இருக்கும். ஆணவக்கொலையை எதிர்க்கும் படமாக இது இருக்கும். இங்கு ஒடுக்குமுறை என்பதை சாதிய ஒடுக்குமுறையாக மட்டுமே சிலர் பார்க்கிறார்கள்.
அது அப்படியல்ல. மத ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை என இங்கு ஒடுக்குமுறைகள் நிறைய இருக்கின்றன.
இப்படத்தின் டைட்டிலை வைத்து சிலர் பற என்பது சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். பற என்பது பறத்தல். அது விடுதலையின் குறியீடு.
ஓரே இரவில் நடக்கும் கதை படம். இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விசயத்தை அவர்கள் ரசிக்கும் விதமாகவே செய்திருக்கிறோம் என்றார்.
படத்தில் அம்பேத்கர் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். வடசென்னை பிளாட்பார வாசியாக நித்திஷ் வீரா, பார் டான்சராக அஷ்மிதா, கிராமத்தில் இருந்து தப்பித்து வரும் காதலர்களாக சாந்தினி மற்றும் சாஜூமோன் நடித்துள்ளனர். திருட்டு வேலைகளில் ஈடுபடும் கேரக்டரில் முனிஷ்காந்த் நடித்துள்ளனர். இம்மாத இறுதியில் படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











