மிக்சர் மாமா தாம்பூல தட்டுடன் வீட்டுக்கு வந்துட்டாரு.. கேஎஸ் ரவிக்குமார் கலகல பேட்டி!
சென்னை: சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த நாட்டாமை படத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த அந்த படம் இன்றைக்கும் பேசப்படுகிறது என்றால் அந்த படத்தில் வரும் மிக்சர் மாமா நகைச்சுவை காட்சி தான் அந்த காட்சியை எப்படி எடுத்தேன் என்று கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
1994ம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நாட்டாமை. இப்படத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா, மனோரமா, விஜயகுமார், சங்கவி, பொன்னம்பலம், கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்திருந்தனர். சரத்குமார் அந்த ஊரில் நேர்மையான நாட்டாமையாக இருக்கிறார். அவரின் நீதிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள். அவருக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் மற்றொரு சரத்குமார். இன்னொருவர் ராஜா ரவீந்தர். இவர்கள் இருவரும் அண்ணனுக்கு மிகவும் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்

வசூல் மழை: ஆனால், வில்லனான பொன்னம்பலம் சரத்குமார் குடும்பத்தை பழி தீர்க்க நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் ஊருக்கும் வரும் டீச்சரை கொன்று அந்த பழியை தம்பி சரத்குமார் மீது போட, அண்ணன் சரத்குமார் தம்பியை ஊரை விட்டு ஒதுக்கிவைக்கிறார். பின் கிளைமாக்ஸில், தம்பிக்கு தவறான தீர்ப்பு கொடுத்ததை அறிந்து, அந்த இடத்திலேயே அதிர்ச்சியில் இறந்து போகிறார். பின் தம்பி சரத்குமார் ஊருக்கு நாட்டாமையாக ஆகிறார். விறுவிறுப்பான அழகான கதை அம்சத்தை கொண்ட இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது.
பெண் பார்க்கும் சீன்: இந்த படத்தில் இடம் பெற்ற நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு என்ற வசனமும், பாடலுக்கும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அதே போல செந்தில் கவுண்டமணி நகைச்சுவை காட்சி தியேட்டரை அதிரவைத்தது எனலாம். இந்த படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டே அந்த மிக்சர் காமெடி தான். படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கச் சென்றபோது செந்திலுக்கு தனது பழைய காதலி நினைவுக்கு வர, மை சன் என்று சொல்லி இது தங்கச்சி என்பார். அதை கேட்ட கவுண்டமணி கடுப்பாகி டேய்..தகப்பா கடைசி வரைக்கும் எனக்கு கல்யாணமே நடக்கவிடமாட்ட போல என்று கண்டபடி திட்டுவார்.

இன்றும் டிரெண்டிங்: அப்படி அந்த நேரத்தில் அவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து கொண்டு இருக்க, எதை பற்றியும் கவலைப்படாமல், ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். இதைப்பார்த்த கவுண்டமணி, ஆமாம் இது யார் என்று கேட்பார், மகளுக்கு இனிஷியல் பிரச்சனை வரக் கூடாதுனு நான் தான் 20 வருஷமா இதுக்கு சோறு போடுகிறேன் என அந்த பெண்ணின் தாயார் கூறுவார். அட்டகாசமான இந்த காமெடி காட்சி தற்போது வரைக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களால் டிரெண்டிங்கில் இருக்கிறது.

மிக்சர் காமெடி: இந்த காட்சி குறித்து அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த கே எஸ் ரவிக்குமார். இந்த காட்சி பண்ணும் போது, எனக்கு எலக்ட்ரீஷியன் ஞாபகத்திற்கு வந்தது, அவர் எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். உடனே அவரை கூட்டிட்டு வர சொல்லி, நடிக்க சொன்னேன், அவர் பயந்து போய் சார் எனக்கு நடிக்க வராது என்றார். நீ நடிக்கவே வேண்டாம், ஆக்ஷன் சொன்னதும், மிக்சர் சாப்பிட்டுக்கிட்டே இரு, அது போதும் என்றேன். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி, அவர் எங்கேயோ போய்விட்டார். பின் தாம்பூல தட்டுடன் வீட்டுக்கு வந்து, ரொம்ப நன்றி சார் என்னை நடிகனாக்கிட்டீங்க என்றார் என கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











