பொன்னியின் செல்வன் போன்ற படங்களை பார்க்கவே மாட்டேன்.. இயக்குநர் லெனின் பாரதி பளிச் பேட்டி!
சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய இயக்குநர் லெனின் பாரதி பொன்னியின் செல்வன் போன்ற படங்களை பார்க்கவே மாட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இயற்கை சார்ந்து யதார்த்த வாழ்க்கையோடு மனிதர்களின் நிஜ வாழ்க்கை கதையாக மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை இயக்கி இருப்பார் இயக்குநர் லெனின் பாரதி.

நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில் தான் அந்த படமே உருவானது. இந்நிலையில், தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வரும் லெனின் பாரதி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்களையும் அடுக்கி உள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலை இயக்குநர்: விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவான மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய இயக்குநர் லெனின் பாரதி மண் மற்றும் மக்கள் சார்ந்த வாழ்வியல் அடிப்படையிலான படங்களை இயக்குவதிலேயே தனக்கு ஆர்வம் அதிகம் எனக் கூறியுள்ளார்.

ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2018ல் வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை பல விருதுகளை வென்றது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் மலைகளும் காடுகளும் அவ்வளவு அழகாக படமாக்கப்பட்டு இருந்தன.
பா. ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த படம்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கி வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த படமும் சாமானியர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட படமாகவே இருக்கும் எனக் கூறினார்.

தி கேரளா ஸ்டோரியில் உண்மையில்லை: தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்து விட்டீர்களா? என்கிற கேள்விக்கு நறுக்கென பதில் அளித்த லெனின் பாரதி அந்த படத்தை நான் பார்க்கவில்லை.
அந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தினர். ஆனால், நீதிமன்றத்தில் இது கற்பனை கதை என்று தான் வாதாடி படத்தையே வெளியிட்டனர். அதனால், அதை பார்க்க எனக்கு உடன்பாடு இல்லை என்றார்.

பொன்னியின் செல்வனை பார்க்க மாட்டேன்: மேலும், யாத்திசை, பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று புனைவு படங்கள் சமீபத்தில் வந்ததே அந்த படங்கள் பற்றிய உங்கள் கருத்து என்கிற கேள்விக்கு, மன்னர் காலத்து படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜிங்க, அதையெல்லாம் ஒருபோதும் பார்க்க மாட்டேன். மேலும், அந்த படங்களை பார்க்க நேரமும் இல்லை எனக் கூறி விட்டார்.


Click it and Unblock the Notifications











