தூய்மை பணியாளருக்கு தங்க செயின் போட்டா.. ரஜினி கொடை வள்ளலா? இந்த இயக்குநர் என்னங்க இப்படி விமர்சிக்கிறாரு?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது இல்லத்திற்கு தூய்மைப் பணியாளர் பத்மாவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி, அவருக்கு தங்கச் செயின் அணிவித்து பாராட்டினார். தூய்மைப் பணியாளர் பத்மாவை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்ட முக்கிய காரணமே, அவர் கீழே கிடந்த 45 சவரன் நகையை அதன் உரிமையாளரிடம் காவல்துறை உதவியுடன் ஒப்படைத்ததை, தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி பலரும் பாராட்டினர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி தனது இல்லத்திற்கு பத்மாவை வரவழைத்து தங்க செயின் அணிவித்து பாராட்டினார். அவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல் வெகுவாக பாராட்டியும் வருகிறார்கள்.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், " துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள் ரஜினிகாந்த் அவர்களே.. உங்கள் பெருந்தன்மை வெங்காயத்தைக் காட்ட அவர்களை சீருடையோடு தான் அடையாளப்படுத்துவீர்களா போலி கொடை வள்ளல்களே.." என்று பதிவிட்டுள்ளார்.

காட்டமான விமர்சனம்: அவரது இந்த காட்டமான விமர்சனம் இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தாலும், இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாகத்தான் கருத்துக்கள் குவிந்து வருகிறது. அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி உள்ளார் ரஜினி. இப்படி இருக்கும் போது, ஒருவரின் நேர்மையை பாராட்டும் விதமாகத்தான் தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார் ரஜினி. அதுவும் தூய்மைப் பணியாளர் சீருடையில் அவரை அழைத்து பாராட்டியதும் சரியே. மேலும் பத்மா முதலமைச்சரைப் பார்க்கச் செல்லும் போதும் சரி, லலிதா ஜூவல்லரி ஓனரை சந்திக்கச் செல்லும் போதும் சரி அவராகவே விருப்பப்பட்டுதான் சீருடையில் செல்கிறார். இது பத்மாவின் தனிப்பட்ட விருப்பம் என்பதையும் லெனின் பாரதி புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.
பாராட்டிய சீனு ராமசாமி: அதேபோல், இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில், " சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தி நகர் தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து அவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்துள்ளார். பத்மா தான் பணியில் இருக்கும் போது கண்டெடுத்த 45 சவரன் நகையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த நேர்மைக்கு கிடைத்த பாராட்டு இது. ஒரு சாதாரண சாமானியனைக் கொண்டாடிய ரஜினிகாந்திற்கு வணக்கம்" என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











