நல்லது, கெட்டதுக்கு தியானம் முக்கியம்.. ஆன்மீகவாதியாக மாறிய லிங்குசாமி.. வாழ்த்திய ரஜினி!
சென்னை: நம்முடைய வாழ்க்கையில் நிகழும் நல்லது, கெட்டது என எதுவாக இருந்தாலும் தியானம் மூலம் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும் என தியானத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இயக்குநர் லிங்குசாமி வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலும், ஹைதராபாத்தில நடைபெறும் குளோபல் ஸ்பிரிச்சுவாலிட்டி சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக லிங்குசாமி, திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற படத்தை இயக்கி முதன் முதலாக இயக்குனராக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 போன்ற பல ஹிட் படங்களை இயக்கினார். இதையடுத்து கடைசியாக, கடந்த ஆண்டு பிரபல நடிகர் ராம் பொத்தினேனி வைத்து 'தி வாரியர்'படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இயக்குநர் லிங்குசாமி: இந்நிலையில், இயக்குநர் லிங்குசாமி தியானம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தியானம் செய்யலாம் என என்னுடைய நண்பர்களிடம் சென்னேன் அவர்கள், வயதானவர்கள் தானே அதை செய்வார்கள் என்கிறார்கள். இது தான் பலருக்கும் இருக்கும் பொதுவான கருத்து. ஆனால் என்னை பொறுத்தவரையில் தியானம் என்பது நம் வாழும் காலத்திலேயே செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நிகழும் நல்லது, கெட்டது என எதுவாக இருந்தாலும் தியானம் மூலம் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும். கடந்த 25 ஆண்டுகளாக நான் தியானம் மேற்கொண்டு வருகிறேன்.
மகா சங்கமம்: என் வாழ்வில் தியானம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. என்னுடைய குருநாதர் பெயர் ஷாஜி. ஸ்ரீ ராமச்சந்திரா மிஷனின் தியான அமைப்பில் பயிற்சியாளராக இருந்து வருகிறேன். ஹன்கா சாந்திவனம் என்ற ஒரு தியான மடம் ஹைதராபாத்தில் உள்ளது. இது ஒரு லட்சம் பேர் அமர்ந்து தியானம் செய்ய கூடிய அளவுக்கு பெரிய இடம். அங்கு, ஒரு தியான நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய குருவின் பல நாள் ஆசை. அது தற்போது நிறைவேறி உள்ளது. மார்ச் 14 முதல் 16 வரை மகா சங்கமம் நடைபெற உள்ளது.
ரஜினிகாந்த் வாழ்த்து: உலகெங்கிலும் இருக்கும் சிறந்த குருநாதர்கள், பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதில் நான் கலந்துகொள்ள போகிறேன். நீங்களும் இந்த மகா சங்கமத்தில் கலந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த குளோபல் ஸ்பிரிச்சுவாலிட்டி சங்கமத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் என பேசியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. இதற்கு ரஜினிகாந்த், ஆடியோ மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











