நடிகர் விஜய் வெற்றி பெற்ற ஃபார்முலா இதுதான்..லிங்குசாமி சொன்ன விஷயம்.. இதுதான் மேட்டரா?
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார் விஜய். அவர் இம்மாநிலத்தின் சி.எம்மாக பதவியேற்பார் என்று பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. இப்போது அவர் வெற்றி பெற்றுவிட்டார். இருப்பினும் அவர் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றார் என பலரும் குழம்பியிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மத்தியில் பெரிய அளவில் கனெக்ட் ஆக வேண்டும் என்றுதான் விஜய் தன்னுடைய திரைத்துறை கரியரையே ஆரம்பத்திலிருந்து கட்டமைத்தார். அது அவருக்கு ஒர்க் அவுட்டும் ஆகி; அவரை டாப் இரண்டு இடங்களுக்குள் கொண்டு வந்து சேர்த்தது. தொடர்ந்து மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து சில வருடங்களுக்கு முன்பு கட்சியும் ஆரம்பித்தார்.
விஜய்க்கு அபார நம்பிக்கை: அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள்.ஆனால் ஆரம்பத்திலிருந்தே விஜய் கான்ஃபிடென்ஸாகத்தான் இருந்தார். ஏனெனில் பெண்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமியர்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை அவர் உணர்ந்தே இருந்தார். அவர் சொன்னபடியே 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி மொத்தம் 108 தொகுதிகளை கைப்பற்றியது.

எப்படி வந்தன வாக்குகள்?: விஜய்க்கு விழுந்த வாக்குகளில் பெரும்பாலானவை பெண்கள் மற்றும் இள வயதினருடையது. அதேபோல் குழந்தைகளும் தங்கள் பெற்றோரை ரொம்பவே நச்சரித்து விஜய்க்கு வாக்களித்த செய்துவிட்டார்கள். குழந்தைகளை வைத்து வாக்குகள் கேட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பது தனிக்கதை. ஆனால் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளின் சொல், சோஷியல் மீடியா உள்ளிட்டவைகள் தவெகவின் வெற்றியில் பெரிய ரோல் ப்ளே செய்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
லிங்குசாமி பேச்சு: இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "எங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் வந்து வாக்களிக்க போக வேண்டும் அதனால் விடுமுறை வேண்டும் என்று கேட்டார்கள். யாருக்கு வாக்களிக்கப்போகிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்களோ, 'குட்டி பசங்க எல்லாம் விஜய்க்கு வாக்களிக்க சொல்கிறார்கள்' என கூறினார்கள். அதேபோல் எனக்கு தெரிந்த ஒரு தம்பி இருக்கிறார். அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'எங்கள் குடும்பத்தில் மொத்தம் 12 வாக்குகள் இருக்கின்றன. எப்போதும் திமுகவுக்குத்தான் போடுவோம். இந்த முறை விஜய்க்கு போடலாம் என இருக்கிறோம் என கூறினார்.
மக்கள் அரசியலில்: தேர்தல் முடிந்து ஒரு பிளம்பர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் கேட்டபோது, விஜய்க்குதான் வாக்களித்தோம் என சொன்னார். எங்கே போனாலும் அந்த சத்தம் கேட்டது. ஏதோ ஒன்று நிகழப்போகிறது என தோன்றியது. மேஜிக் நிகழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது பார்த்துக்கொண்டிருப்பது சினிமாவா நிஜமாவா என தெரியவில்லை. அவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார். மக்களும் அரசியலுக்குள் வந்துவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications