Lokesh Kanagaraj: ட்ரெயிலரில் கெட்ட வார்த்தையை மியூட் செய்த விவகாரம்.. விளக்கமளித்த லோகேஷ்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படமாக லியோ படம் உருவாகியுள்ளது.
லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளை படம் சந்தித்து வருகிறது.

லியோ ட்ரெயிலரில் கெட்ட வார்த்தையை மியூட் செய்த விவகாரம் குறித்து பேசிய லோகேஷ்: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த வாரத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான அதிகப்பட்ச ப்ரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். படத்தின் வீடியோக்கள், கிளிம்ப்ஸ், ட்ரெயிலர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. அனிருத் இசையில் படத்தில் அதிரடி மற்றும் மெலடி பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படத்தின் ப்ரமோஷனுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகின்றன். படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை லோகேஷ் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 30ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. இதனால் இசை வெளியீட்டில் விஜய்யின் பேச்சை கேட்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆயினும் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. மிரட்டலான ட்ரெயிலர் வெளியான நிலையில், அதில் விஜய் பேசியிருந்த கெட்ட வார்த்தை சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த கெட்ட வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், விஜய் படங்கள் எப்போதுமே விமர்சனங்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதை சுட்டிக் காட்டினார். ட்ரெயிலரில் இடம்பெற்ற கெட்ட வார்த்தை குறித்த விமர்சனங்களை கருத்தில் கொண்டுதான் அதை மியூட் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கெட்ட வார்த்தை மட்டும் இல்லையென்றால் படத்தின் வன்முறை காட்சிகளை யாரும் விமர்சித்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கெட்ட வார்த்தைக்கும் விஜய் அண்ணாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார். படத்தின் கதையை தான் கூறியதன் பின்பு, தன்னுடைய இயக்கத்தில் விஜய் எந்தவிதத்திலும் தலையிடவில்லை என்று கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், விஜய், முழுமையாக இயக்குநர்களின் ஹீரோ என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் முழுமையான வடிவம் வரும் திங்கட்கிழமைக்குள் உருவாகிவிடும் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார். படம் சர்வதேச அளவில் வரும் 19ம் தேதி ரசிகர்களை கவர தயாராகியுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலும் புக்கிங் சிறப்பான வகையில் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











