Vijay in Politics - என்னது விஜய்யின் அரசியலா?.. எனக்கு தெரியாதுங்க - நேக்காக தப்பித்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) விஜய் அரசியலுக்கு வருகிறாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்துவிட்டதாக சமீபத்தில்தான் இயக்குநர் லோகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 68: லியோவில் நடித்துகொண்டிருந்தபோதே தனது 68ஆவது படத்தில் கமிட்டானார் விஜய். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க; வெங்கட் பிரபு இசையமைக்கிறார். முதன்முறையாக விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் அந்தப் படத்துக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பித்து மும்முரமாக நடந்துவருகிறது.
அரசியலில் விஜய்?: இதற்கிடையே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எப்படி பல காலம் ஆர்வமாக இருந்தார்களோ அதேபோல் விஜய்யும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆவல் விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரது ஆவலை மேலும் தூண்டும்படிதான் விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகளும் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. எனவே ரஜினி போல் காலம் தாழ்த்தி பிறகு இல்லை என சொல்வாரா இல்லை என்பதற்கு காலத்திடம்தான் பதில் இருக்கிறது.
விஜய்யின் செயல்: இதற்கிடையே தனது மக்கள் இயக்கத்தினரை வைத்து கடந்த பல வருடங்களாகவே நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார் விஜய். ஆனால் சமீப காலமாக தானே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று பேரை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார்.

கன்ஃபார்ம் அரசியல்தான் போல?: அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையும் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது இந்த செயல்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அதற்கான விதையைத்தான் இப்போது தீவிரமாக விதைத்துக்கொண்டிருக்கிறார் என்கின்றனர் பலர். அதேசமயம் விஜய் அரசியலுக்கு வந்தால் படுதோல்வி அடைவார் என தயாரிப்பாளர் கே.ராஜன் போன்றோரும் சொல்லி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் பதில்: இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இதற்கான பதிலை அரசியல் தெரிந்தவர்கள் சொன்னால் சரியாக இருக்கும். எனக்கு அரசியல் தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது" என்றார். இதைப் பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் நேக்காக தப்பிவிட்டாரே விவரமான ஆளாகத்தான் இருக்காரு என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











