Lokesh Kanagaraj: சரியான திட்டமிடல்.. குறைவான காலகட்டத்தில் படங்களை முடிக்கும் லோகேஷ் கனகராஜ்!
சென்னை: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படும் நிலையில், கடந்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

குறைவான நாட்களில் சூட்டிங்கை முடிக்கும் லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் விஜய் போர்ஷன்கள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் அப்டேட் தெரிவித்துள்ளார்.
படத்தில் கேங்ஸ்டர் உள்ளிட்ட இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டையும் படக்குழுவினர் யாரும் வெளிப்படுத்தாமல் மௌனம் சாதித்து வருகின்றனர். அந்த அளவிற்கு லோகேஷ் மிகவும் ஸ்ட்ரிக்டாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
முன்னதாக காஷ்மீர் சூட்டிங்கின்போதும் விஜய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரின் அடுத்தடுத்த போஸ்டர்கள், வீடியோக்கள் வெளியாகி மாஸ் காட்டின. இந்நிலையில் விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீடு மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரெயிலர் ரிலீசும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த ப்ரமோஷன்களையும் படக்குழுவினர் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரியில் வெளியான விஜய்யின் வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், சிறப்பான வசூலை குவித்தது. இந்நிலையில் மிகுதியான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள லியோ படம் 1000 கோடிகளை சர்வதேச அளவில் குவிக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் 125 நாட்களில் திட்டமிட்டு லோகேஷ் நடத்தி முடித்துள்ளார். இதில் காஷ்மீரில் மட்டும் 52 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்த படங்களின் சூட்டிங்கும் இதேபோல சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டுடன் குறைவான நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குறிப்பிட்ட காலத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பதுடன், தயாரிப்பாளருக்கும் செலவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறார் லோகேஷ். இவரது முதல் படமான மாநகரம் வெறும் 45 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் 62 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மொத்த சூட்டிங்கும் இரவு நேரத்தில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விஜய் நடிப்பில் எடுக்கப்பட்ட மாஸ்டர் படம் 129 நாட்களிலும், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 110 நாட்களிலும் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் சூட்டிங் 125 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











