Lokesh kanagaraj: என்னைவிட நல்லா புரிஞ்சி வச்சிருக்காரு.. அனிருத்தை உச்சிமுகர்ந்த லோகேஷ்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
லியோ படத்தின் அடுத்தடுத்து இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோகேஷின் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தலைவர் 171 படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.
அனிருத்துடனான தன்னுடைய உறவு குறித்து நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய், த்ரிஷா லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வெளிநாடுகளில் படத்தின் புக்கிங் 6 வாரங்களுக்கு முன்னதாகவே துவங்கப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது. இங்கும் படத்தின் புக்கிங்குகள் வரும் 15ம் தேதி முதல் துவங்கும் என்று முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
இதனிடையே படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்கள் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து படத்தின் ட்ரெயிலர், வீடியோக்கள், பாடல்கள், கிளிம்ப்ஸ் என அடுத்தடுத்து படத்தின் அப்டேட்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெயிலர் மிகப்பெரிய வரவேற்பையும் சில சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.
முன்னதாக படத்தின் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத், இசையமைத்துள்ள நிலையில், நாளைய தினம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நா ரெடி பாடல், ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருந்தது. இந்நிலையில் நாளைய தினம் வெளியாகவுள்ள பாடல், குடும்ப பாடலாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து பேசிய அனிருத், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பாடல்கள் குறித்து தன்னிடம் எப்போதும் எதுவும் பேசமாட்டார் என்றும், பாடலுக்கான சூழலை மட்டும் சொல்விவிடுவார் என்றும் மற்றபடி தான் கொடுக்கும் பாடலை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே பயன்படுத்துவார் என்றும், அந்த அளவிற்கு தன்மீது லோகேஷ் கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் செயல்படுவார் என்றும் நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக தொடர்ந்து பேட்டிகளை கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜ், அனிருத்தின் இந்த இன்டர்வியூ குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். அனிருத் தனக்கு சகோதரருக்கும் மேலானவர் என்று கூறியுள்ள லோகேஷ், தனக்கு எப்போது ஸ்ட்ரெஸ் ஏற்பட்டாலும் அனிருத்திற்குதான் முதலில் கால் செய்து பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக அனிருத்தின் ஸ்டூடியோவிற்கு சென்று உட்கார்ந்துவிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனிருத்திற்கு பாடல்கள் மற்றும் பிஜிஎம் குறித்து தன்னை விட அதிகமாக தெரியும் என்று கூறியுள்ள லோகேஷ், அனிருத் கொடுக்கும் இசையை இறுதியாகத்தான் தான் கேட்பேன் என்றும் அதை உடனடியாக பயன்படுத்திவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ படங்களில் இந்தக் கூட்டணி சிறப்பான இசையை கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக இணையவுள்ள தலைவர் 171 படத்திலும் இசை மிரட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











