மிரட்டலான கூட்டணிக்கு தயாராகும் பாலிவுட் சினிமா.. அமீர் கானை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் துவங்கியது. மிகச் சிறப்பான கதைக்களத்துடன் மாநகரம் படத்தை கொடுத்து அனைத்து தரப்பினரின் புருவத்தையும் உயர்த்த செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். விஜய், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பும் இந்தப் படத்தின்மூலம் லோகேஷுக்கு கிடைத்தது.
கடந்த ஆண்டில் விஜய்யின் லியோ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ். முன்னதாக இந்த கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில், லியோ படத்தில் 2வது முறையாக இணைந்திருந்தது. மாஸ்டர் படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்த நிலையில் லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்துவரும் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். மாநகரம் படத்தில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து கைதி, மாஸ்டர், லியோ என பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த ஆண்டில் நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார்.
ரஜினிகாந்த் -லோகேஷ் கூட்டணி: கூலி படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. கூலி படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடிக்க உள்ள கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக முன்னதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமீர் கானை இயக்கும் லோகேஷ்: பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும், இந்தக் கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றால் விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாலிவுட்டில் தயாரிப்பாளர், நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருபவர் நடிகர் அமீர் கான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் மற்றும் சந்தீப் வங்கா குறித்த விமர்சனம் ஒன்றை அமீர் கான் வெளிப்படுத்தியிருந்தார். இவர்களுக்கு சரியான மேக்கிங் தெரியவில்லை என்றும் வன்முறையை மட்டுமே நம்பி படம் எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு?: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் -அமீர் கான் கூட்டணி மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. முன்னதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜுடன் ஒப்பந்தம் செய்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்தில் பிரபாஸ் போன்ற மாஸ் தெலுங்கு ஹீரோ, நாயகனாக இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அமீர்கான் -லோகேஷ் கனகராஜ் கூட்டணி எதிர்பாராததை எதிர்பாருங்கள் எண்ணும்படியான கூட்டணியாக அமையவுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











