'தொட்ரா'... ஷூட்டிங்கில் ஹீரோயினை அடித்ததற்காக மன்னிப்பு கேட்ட மதுராஜ்
நடிகை வீணாவை அடித்ததற்காக தொட்ரா படத்தின் இயக்குனர் மதுராஜ் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்
சென்னை: இயக்குனர் மதுராஜ், தொட்ரா படப்பிடிப்பின்போது கதாநாயகி வீணாவை அடித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜே.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தொட்ரா'. இப்படத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி கதாநாயகனாகவும், அறிமுக நடிகை வீணா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக பணியாற்றிய மதுராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நாயகி வீணாவை பளார் என இயக்குனர் அறைந்துவிட்டார்.
சீரியஸான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தபோது, அதன் முக்கியத்துவம் உணராமல், நடிகை வீணா ஜாலியாக இருந்ததாகவும், இதனால் கிட்டத்தட்ட 30 டேக்குக்கு மேல் போனதால் போகத்தில் அறைந்துவிட்டதாகவும் இயக்குனர் மதுராஜ் அப்போது விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில்,தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பேசிய இயக்குனர் மதுராஜ், படப்பிடிப்பின் போது நடிகை வீணாவை அடித்ததற்காக மேடையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக விழாவில் அவர் பேசியதாவது, " இந்த படத்தை பார்த்த என் குருநாதர் பாக்கியராஜ், என் பெயரை காப்பாற்றிவிட்டாய் என்றார். இதைவிட பெரிய விருது எனக்கு கிடைக்காது. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின்போது அடித்ததற்காக, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இந்த விழாவில் நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications











