HBD Maniratnam - பொன்னியின் செல்வன் மட்டுமல்ல.. அசுரனும் இவர் எடுத்திருக்க வேண்டியதுதான்..
சென்னை: HBD Maniratnam (பிறந்தநாள் வாழ்த்துகள் மணிரத்னம்) இயக்குநர் மணிரத்னம் வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து மூன்று திரைக்கதைகளை எழுதியிருந்தார். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் இதோ
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர்களில் மணிரத்னத்தின் பங்கு தவிர்க்கவே முடியாது. பாலுமகேந்திரா, மகேந்திரன் உள்ளிட்டோர் மௌனங்களை மொழியாக்கியவர்கள். மணிரத்னம் அந்த மௌன மொழியில் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டுமே சேர்த்து அந்த மௌன மொழியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றவர்.

ஃப்ரெஞ்ச் பியர்ட் வள்ளுவர்: மணிரத்னத்தை ஃப்ரெஞ்ச் பியர்ட் வைத்த வள்ளுவர் என்று சொல்லலாம். ஒன்றரை அடியில் வள்ளுவர் எப்படி பல விஷயங்களை சொல்லி சென்றிருக்கிறாரோ அதுபோல் மணி சில வரிகளில் மாஸ் மேஜிக்கை நிகழ்த்திவிடுவார். அவரது ஒவ்வொரு காட்சியமைப்பும் சினிமா மீது காதல் கொண்டவர்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டுபோய் நிறுத்தும்.
ஃப்ரெஷ் மணி; பகல் நிலவு படத்தின் மூலம் அறிமுகமாகி தோல்வியை சந்தித்தாலும் ஏதோ ஒன்று ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதே என்று ரசிகர்களை நினைக்க வைத்தவர். உண்மை கதைகளை எடுப்பதில் எப்போதுமே சிக்கல் என்று நினைத்த இயக்குநர்கள் மத்தியில் அதனை ரொம்பவே லாவகமாக செய்துகாட்டியவர் மணிரத்னம். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்து அவர் உருவாக்கிய பம்பாய் படத்தை உதாரணமாக சொல்லலாம். மிகப்பெரிய சென்சிட்டிவ்வான சப்ஜெக்ட்டை காதலையும், எமோஷனையும் கலந்து கொடுத்திருப்பார்.
எப்போதும் மணி சார்தான்: இயக்குநர்களின் பெயர் அவர்களுக்கு பெரிய அடையாளத்தை கொடுக்கக்கூடியவை. பொதுவாக எந்த இயக்குநராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் மணிரத்னத்தை மட்டும்தான் மணி சார் என்று அழைப்பார்கள். அதற்கு காரணம் அவரது படங்கள் மட்டுமில்லை அவரது செயல்களும்தான். எப்போதும் அமைதிகொள்ளும் முகத்தை வைத்துக்கொண்டு சின்ன சிரிப்பை உதிர்த்துக்கொண்டு நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் என அடர்த்தியான கதைக்களங்களை எளிமையான உணர்வோடு ரசிகர்களுக்கு கொடுப்பது அவருக்கு மட்டுமே தெரிந்த மேஜிக்.
புத்தகம் டூ சினிமா: பொதுவாக ஒரு நாவலை சினிமாவாக எடுப்பது இயக்குநர்களுக்கு மிகப்பெரிய வேலைதான். அதை வெற்றிமாறன் இப்போது தொடர்ச்சியாக செய்து எளிமைப்படுத்தியிருக்கிறார். அதேசமயம் மணிரத்னம் அதற்கான விதையை போடுவதில் எப்போதுமே ஆர்வமாக இருந்தவர். பொன்னியின் செல்வனை திரையில் பார்க்க முடியுமா என்று தமிழர்கள் ஏங்கிக்கொண்டிருக்க அதை எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்தும் சாத்தியமாக்கவில்லை. ஆனால் மணிரத்னம் அதனை சாத்தியமாக்கினார்.

அசுரன்: மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மீது பலருக்கு பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் பொன்னியின் செல்வனுக்கு முன்னதாகவே ஒரு நாவலை திரைப்படமாக்க அவர் நினைத்திருந்தார். அந்த நாவல் பூமணி எழுதிய வெக்கை. மூன்று வடிவங்களில் திரைக்கதையும் எழுதியிருந்தார். ஆனால் அவர் எடுக்கும் முன்பாகவே வெற்றிமாறன் பூமணியிடம் அனுமதி பெற்று படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் முன்னதாக ஒருமுறை மணிரத்னத்தை சந்தித்த வெற்றிமாறனிடம், என்ன செஞ்சிட்டு இருக்க என கேட்டிருக்கிறார் மணி. அதற்கு வெற்றிமாறன், வெக்கை நாவலை படமாக்கப்போகிறேன் என கூறியிருக்கிறார்.
உடனே ஷாக்கான மணிரத்னம், நானும் வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து மூன்று திரைக்கதைகளை எழுதியிருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். ஆச்சரியமடைந்த வெற்றிமாறன் அதை நான் படிக்கலாமா என கேட்க, இல்லை நீ உன் ஸ்டைலில் படம் எடு அதை பார்த்த பிறகு எனது திரைக்கதையை தருகிறேன் என்றாராம் மணிரத்னம் ஒருவேளை வெக்கையை மணிரத்னம் எடுத்திருந்தால் அதன் ஃப்ளேவர் மாறியிருக்கலாம். இருப்பினும் நாவலை சினிமாவாக்க வெற்றிமாறனுக்கு முன்னதாகவே மணிரத்னம் நினைத்திருக்கிறார். அந்த எண்ணம் பாராட்டப்பட வேண்டியது. இன்று அவருக்கு 67ஆவது பிறந்தநாள். பில்மிபீட் தமிழ் சார்பாக மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











