அப்போ பொன்னியின் செல்வன்; இப்போ எழுத்தாளர் கல்கி வரலாறு.. மணிரத்னம் செய்த சம்பவம்
சென்னை: பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய எழுத்தாளர் அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாறை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். அதனை கல்கியின் பேத்திகள் பெற்றுக்கொண்டனர்.
தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக திகழ்வது பொன்னியின் செல்வன். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அமரர் கல்கி எழுதிய இந்த நாவல் காலங்கடந்து இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையையும், புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் பல்லாயிரம் பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் இந்தத் தலைமுறையும் ஆர்வமாக படித்துவருகின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானது
மணிமகுடமாக திகழும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க எம்ஜிஆர் முதலில் முயன்றார். இதற்காக இயக்குநர் மகேந்திரனும் திரைக்கதை எழுதும் பணியில் தொடங்கினார். ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படவே இல்லை. இதனையடுத்து கமல் ஹாசனின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இப்படி பொன்னியின் செல்வன் படமாவது தள்ளிப்போய்க்கொண்டே இருக்க இறுதியாக அந்தத் திட்டத்தை கையில் எடுத்தார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

வசூலில் கெத்து காட்டிய பொன்னியின் செல்வன் திரைப்படம்
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்கள்; தங்களது எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்யவில்லை என்ற வருத்தத்தை தெரிவித்தனர். இருப்பினும் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் சரித்திர நாவல்களை படமாக்குவதற்கு பல இயக்குநர்களுக்கு நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்த சூழலில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர். இதற்கான பணிகள் முழுவதுமாக முடிவடைந்திருக்கிறது. முதல் பாகத்தில் நிகழ்ந்த சிறு சிறு தவறுகள் இரண்டாவது பாகத்தில் நிகழாது என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தப் படமானது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ட்ரெய்லர் மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது

எழுத்தாளர் அமரர் கல்கியின் வரலாறு
இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பத்திரிகையாளர் சந்திரமௌலி 'கல்கி: பொன்னியின் செல்வர்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட கல்கியின் பேத்திகளான சீதா ரவியும், லட்சுமி நடராஜனும் பெற்றுக்கொண்டனர்.

பெருமிதம் கொண்ட இயக்குநர் மணிரத்னம்
இதுகுறித்து பேசிய மணிரத்னம், "அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் மீது ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் சூழலில் கல்கியின் வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது பொருத்தமான ஒன்று" என்றார்.


Click it and Unblock the Notifications











