Maniratnam : ராஜமௌலிக்குத்தான் நன்றி சொல்லணும்.. பொன்னியின் செல்வன் 2 பிரமோஷனில் மணிரத்னம் கூல்!
ஐதராபாத் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக இந்தப் படம் வரும் 28ம் தேதி ரிலீசாக உள்ளது.
முதல் பாகம் ஏற்படுத்திய வரவேற்பு மற்றும் வசூலை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ராஜமௌலியை பாராட்டிய மணிரத்னம் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஷோபிதா, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வசூலை தொடர்ந்து தற்போது வரும் 28ம் தேதி படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கான பிரமோஷனை படக்குழுவினர் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், மணிரத்னத்தின் கனவு படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் வெறுமனே 155 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். அந்த அளவிற்கு அவரது திட்டமிடல் இருந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் ராஜமௌலியே தனது பேட்டியொன்றில் பாராட்டியிருந்தார். அவருக்கு பாகுபலி படத்தின் பாகங்களை எடுக்க வருடங்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் 2 படம், ரசிகர்களை மிகச்சிறப்பான வகையில் கவர்ந்த நிலையில், படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் இந்த கேரக்டர் நிஜத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்ற ஆவலையும் ஏற்படுத்தத் தவறவில்லை. கல்கியின் கேரக்டர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்தப் படம், சிறப்பாக பூர்த்தி செய்தது. முதல் பாகத்தில் அதிகமான அழுத்தமான காட்சி அமைப்புகள் இல்லை என்ற குறையை இரண்டாவது பாகம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் பிரமோஷன்களை கடந்த இரு மாதங்களாக படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் ஆன்த்தத்தை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டிருந்தார். முதல் பாகத்திற்கு செய்ததை போலவே, இரண்டாவது பாகத்திற்கும் படத்தின் நடிகர், நடிகைகள், பிரமோஷனல் டூரையும் மேற்கொண்டனர். சென்னையில் துவங்கிய அவர்களது டூர், கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூரு என நீண்டது. தொடர்ந்து ஐதராபாத்திலும் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை படக்குழுவினர் நடத்தினர்.
இந்நிலையில், இத்தகைய பிரமோஷனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய படத்தின் இயக்குநர் மணிரத்னம், இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய சுபாஷ்கரனுக்கு முதல் நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, பேசிய அவர், இந்தப் படத்திற்கான விதையை போட்டது இயக்குநர் ராஜமௌலிதான் என்று குறிப்பிட்டார். தான் முன்னதாகவே இதை பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவானதே, பொன்னியின் செல்வன் படமும் உருவாக காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜமௌலியே பாகுபலி போன்ற வரலாற்று பின்னணி கொண்ட படத்தை இரண்டு பாகங்களாக கொடுத்து, சினிமா இன்டஸ்ட்ரிக்கே ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் மணிரத்னம் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் ராஜமௌலிக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் படத்தின் மூலமே வரலாற்றுப் படங்களை இயக்கும் நம்பிக்கை இந்திய சினிமாவிற்கு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











