Velpaari :வேள்பாரி நாவலை இயக்கப் போவதில்லை.. மணிரத்னம் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
சென்னை : தன்னுடைய கனவு பிராஜெக்ட்டாக பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கியுள்ளார் மணிரத்னம்.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் பிரமோஷனல் டூரில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில், இயக்குநர் மணிரத்னமும் அவர்களுடன் இணைந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கும் வேள்பாரி படம் : பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். தனது கனவு பிராஜெக்ட்டான இந்தப் படம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்ற முனைப்பில்தான் இந்தப் படத்தை இயக்கி முடித்ததாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். படம் தன்னை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்ற போதிலும், ரசிகர்களை திருப்திப் படுததும் வகையில் தான் இந்தப் படத்தை கொடுத்துள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஷோபிதா மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மியுடன் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த மணிரத்னம், படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். படம் ஆர்ஆர்ஆர் போல ஆஸ்காருக்கு செல்லுமா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்தப் படம் ஆஸ்கரை மனதில் வைத்து எடுக்கப்படவில்லை என்றும் ரசிகர்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
படத்தில் ஆதித்த கரிகாலனின் மரணம் இதுவரை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் படத்தின் சஸ்பென்சே அதுதான் என்றும் இன்னும் சில தினங்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் அமர்ந்து இந்த கேரக்டர் குறித்தும், படத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் மணிரத்னம் மற்றும் விக்ரம் இருவரும் கூறினர்.

மேலும் தொடர்ந்து வரலாற்றுப் படங்களை எடுப்பாரா என்ற கேள்விக்கும், அதுபோன்ற ஐடியா இல்லை என்றும், அப்படி தொடர்ந்து எடுத்தால் அதுவே தனது அடையாளமாக மாறிவிடும என்றும் மணிரத்னம் குறிப்பிட்டார். ஆனால் இளம் இயக்குநர்கள், கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நாவல்களை படமாக கொடுப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல இந்த சந்திப்பின்போது பேசிய விக்ரம், தமிழில் உலக தரத்திலான படங்களை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாகவும் மலையாளத்தில் இத்தகைய முயற்சிக்ள மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தமிழில் வேள்பாரி நாவலை எடுக்கும் விருப்பம் உள்ளதா என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிரத்னம், தன்னுடைய நண்பர் ஷங்கர், அந்த முயற்சியில் உள்ளதாகவும் அவர் அந்தப் படத்தை எப்படி சிறப்பாக கொடுப்பார் என்பதை அறிய தான் ஆவலாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து நடிகர் விக்ரமும் அந்த உரையாடலின்போது தெரிவித்தார். இதையடுத்து வேள்பாரி படம் மிகவும் பிரம்மாண்டமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











