ரீமேக்கா இல்லாம புதுசா கொடுக்கணும்னு நினைச்சேன்... சந்தானம் பட இயக்குநர் சொல்லியிருக்காரு!
சென்னை : நடிகர் சந்தானம் நடிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஏஜெண்ட் கண்ணாயிரம்.
இந்தப் படம் ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.
இந்தப் படம் மற்ற ரீமேக் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்று அதன் இயக்குநர் தற்போது கூறியுள்ளார்.

நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா மற்றும் சபாபதி படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தன. டிக்கிலோனா படம் ஒரளவிற்கு கைகொடுத்த நிலையில், அடுத்தப் படத்தை வெற்றிப் படமாக்கும் தீவிரத்தில் சந்தானம் காணப்படுகிறார்.

ஏஜெண்ட் கண்ணாயிரம்
அவரது நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

இயக்குநர் மனோஜ் பீதா
வஞ்சகர் உலகம் படத்தின்மூலம் கவனத்தை பெற்ற மனோஜ் பீதா இந்தப் படத்தை இயக்கியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

டிடெக்டிவ் ஏஜெண்ட்
படத்தில் டிடெக்டிவ் ஏஜெண்டாக நடிகர் சந்தானம் நடித்துள்ளது டீசர் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஒரு கொலையை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக நடித்துள்ளார். சாதாரணமாக காமெடியுடன் அந்த டாஸ்கில் நுழைந்து அவர் மாட்டிக் கொள்வதும் பின்பு சீரியசாகவே அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதுமாக கதை செல்வதாக கூறப்படுகிறது.

ரீமேக் படமாக இருக்காது
இந்நிலையில் தெலுங்கு படத்தை அடிப்படையாக மட்டுமே எடுத்துக் கொண்டு, படத்தில் தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி எமோஷனல் க்ரைம் திரில்லராக உருவாக்கியுள்ளதாக மனோஜ் பீதா தெரிவித்துள்ளார். வழக்கமான ரீமேக் படங்களின் வரைமுறையை இந்தப் படத்தில் உடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அம்மா சென்டிமெண்ட்
ரீமேக் செய்யும்போது ஒரிஜினல் வெர்ஷனை அப்படியே எடுக்கும்போதுதான் வெற்றி கிடைக்கும் என்ற பார்முலாவை விட்டுவிட்டு புதுப்படம் போல ஏஜெண்ட் கண்ணாயிரத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரிஜினலை காட்டிலும் இந்தப் படத்தில் அம்மா சென்டிமெண்டை மேலும் சிறப்பாக கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சந்தானம்
இந்தப் படத்தில் பழைய சந்தானத்தை பார்க்க முடியாது. அவரை புதிதாக பார்க்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அவரது வழக்கமான கலாய், கவுண்டர்களை இந்தப் படத்தில் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் படத்தில் ஹியூமருக்கு பஞ்சமிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இளையராஜா பாடல் ரீமிக்ஸ்
படத்தில் நாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, புகழ் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











