ஒரு வழியாக துருவ் விக்ரம் படத்தை தொடங்கிய மாரி செல்வராஜ்.. நாயகியாக பிரேமம் பட நடிகை ஒப்பந்தம்!
சென்னை : மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பேசிய பரியேறும் பெருமாள் திரைப்படம், மக்களிடையே மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

அதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. ஸ்போர்ட்ஸ் படம் என்று இயக்குநர் பா.இரஞ்சித் அறிவித்தார்.
ஆனால் திடீரென உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கினார். திராவிட கட்சிகள் மீதான விமர்சனத்தை உதயநிதி ஸ்டாலின் மூலமாகவே மாரி செல்வராஜ் பேசியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சுயமரியாதையையும், சமூகநீதியையும் மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் பேசியது விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறுவர்களை வைத்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வாழை என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார் மாரி செல்வராஜ். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் ரிலீஸாகவுள்ளது. இதனால் துருவ் விக்ரம் உடனான திரைப்படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். பா.இரஞ்சித் மற்றும் அப்லாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக பிரேமம் படத்தில் நடிக்க அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கொடி, சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
துருவ் விக்ரம் இந்த படத்தில் கபடி வீரராக நடிக்கவுள்ளார். மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம், நீண்ட நாட்களாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதேபோல் மாநில அளவிலான கபடி போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











