Mari Selvaraj - மாரி செல்வராஜுக்கு ஆள் உயர கட் அவுட் - மாஸ் காட்டும் மாமன்னன்
நெல்லை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) மாமன்னன் திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆள் உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
எப்படி இருக்கு படம்?: உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், மாரி செல்வராஜின் இயக்கம் என்பதாலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குக்கு சென்றனர். எதிர்பார்த்தபடியே படம் மிகச்சிறப்பாக இருக்கிறது என்றும்; வழக்கம்போல் மாரி செல்வராஜ் இந்தப் படத்திலும் சமத்துவத்தை பேசியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.

வடிவேலு: குறிப்பாக படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் மிக அருமையாக வந்திருக்கிறது. இனி தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை மாரி வடிவமைத்திருக்கிறார். நிச்சயம் வடிவேலு ஒரு பிறவி கலைஞன். அதுமட்டுமின்றி இயக்குநர் பட ரிலீஸுக்கு முன்னர் சொன்னது போலவே இதில் வழக்கமான வடிவேலு இல்லை என்றும் சிலாகித்துவருகின்றனர்.
குவியும் வாழ்த்து: இதற்கிடையே மாரி செல்வராஜையும், மாமன்னன் படத்தையும் திரையுலக பிரபலங்களும் பாராட்டிவருகின்றனர். நேற்று படத்தை பார்த்த தனுஷ் மாமன்னன் ஒரு எமோஷன் என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், வெற்றி உன்னை சூடிக்கொள்ளட்டும் மாரி செல்வராஜ்; வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.தனுஷ், பா.இரஞ்சித் தவிர்த்து பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.
மாஸ் மாமன்னன்: இந்நிலையில் திருநெல்வேலியில் ஒரு திரையரங்கில் மாமன்னன் படத்தை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆள் உயர கட் அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்த மாரியின் ரசிகர்கள் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படுகிறது என்றால் அவர் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்துகொள்ளலாம். நிச்சயம் மாரி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
படம் பார்த்த மாரி: முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் சென்னை காசி திரையரங்கத்தில் தனது உதவி இயக்குநர்களுடன் படத்தை பார்த்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்த உதயநிதிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன். அதேபோல் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோருக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். என் படம்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். படத்தை பார்த்துவிட்டு மக்கள் சொல்வதுதான் நிஜமான கருத்து" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











