மாமன்னன் படம் பார்த்து கட்டித்தழுவி கொண்ட முதல்வர்… குஷியில் மாரிசெல்வராஜ்!
சென்னை: மாமன்னன் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவி பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் உதயநிதி , வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
மாமன்னன்: பரியேறும் பெருமாள்,கர்ணன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படமான மாமன்னன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதுமட்டுமில்லாமல் உதயநிதி மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் என்பதால், அந்த படம் சிறப்பான படமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதாக கூறியிருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான ஆர்வம் இரு மடங்கானது.

ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள்: மேலும், சென்னையில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக இருக்கும் போது, தேவர் மகன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பேசு பொருளானது. இந்த சர்ச்சையும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க காரணமானது.
தனுஷ் பாராட்டு: இதையடுத்து, மாமன்னன் படம் பார்த்த தனுஷ்,மாரி செல்வராஜின் மாமன்னன் படம் எமோஷன். வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் படத்துக்கு தேவையான சரியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பகத் மற்றும் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இடைவேளை காட்சியில் திரையரங்குகள் அதிர போகிறது என படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார்.
கட்டித்தழுவிய முதல்வர்: படம் இன்று வெளியான நிலையில், ஸ்பெஷல் ஷோவில் படம் பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படத்தை பார்த்த பின் கட்டித்தழுவி கொண்டாடியதாக மாரி செல்வராஜ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











