Maamannan - மாமன்னன் வேறு செய்தியை பேசுகிறது.. மாரி செல்வராஜ் ஓபன் டாக்
சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படம் முற்றிலும் வேறு செய்தியை பேசுகிறது அதை மக்கள் விவாதிப்பார்கள் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள்,கர்ணன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ரிலீஸ்: நடிகர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். அதனால் மாமன்னன் படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார். எனவே படத்தின் மீது அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாமன்னன் திரையரங்குகளில் வெளியானது.

எப்படி இருக்கிறது?: படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குக்கு சென்றனர். மாமன்னன் படம் தங்களை திருப்திப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மாரி செல்வராஜ் இதிலும் அரசியல் பேசியிருக்கிறார். அதுவும் ஆளுங்கட்சி அமைச்சரை வைத்தே இப்படி ஒரு அரசியலை திரையில் பேசுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்.
வடிவேலு தான் ஒரு பிறவி கலைஞன் என்பதை நிரூபித்துவிட்டார். இந்தப் படத்துக்கு பிறகு வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸ் நிச்சயம் பிக்கப் ஆகிவிடும். அந்த அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ஃபகத் பாசில்தான் படத்தின் முதுகெலும்பு என ஏகத்தும் சிலாகித்துவருகின்றனர்.
படக்குழு பேட்டி: இந்தச் சூழலில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னையில் இருக்கும் திரையரங்கத்தில் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர், "மாமன்னன் படம் முற்றிலும் வேறு செய்தியை பேசுகிறது. நிச்சயம் மக்கள் இந்தப் படத்தை விவாதிப்பார்கள். மாமன்னன் படம் எதை உணர்த்துகிறது, எதுவாக உள்வாங்கப்படுகிறது. இதை எல்லாம் மக்கள்தான் கூற வேண்டும். மக்கள்தான் படம் குறித்து பேச வேண்டும்.
அனைவருக்கும் நன்றி: இந்தக் கதையை எடுக்க முடியாதோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால், இது படமாக வெளி வந்ததற்கு உதயநிதிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். மேலும், இசையால் இந்தப் படத்தை தாங்கிப் பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சாருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி" என்றார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு: மாரி செல்வராஜைத் தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இந்தப் படத்தை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். இது ஆறு மாத கால உழைப்பு. எங்கள் உழைப்பை தற்போது மக்கள் கொண்டாடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவே என் கடைசி படம். இப்படமே என்னை பூர்த்தி செய்துவிட்டது" என முடித்தார்.


Click it and Unblock the Notifications











