விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லல.. விஜய் பயப்படுகிறாரா? இயக்குனர் மோகன் ஜி கேள்வி!
சென்னை: நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜய் தப்பான ரூட்டில் போவது தான் வருத்தமாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என இயக்குநர் மோகன் ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி. 2020 ஆம் ஆண்டு திரௌபதி என்ற படத்தை இயக்கியதன் மூலம் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். திரௌபதி படத்தை தொடர்ந்து ருத்ரதாண்டவம், செல்வராகவனை வைத்து பகாசுரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி, தற்போது தான் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு படத்தின் டைட்டில் வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இந்த படத்தில் இணைய இருக்கிறோம். இந்தியா முழுவதும் பேசும் படமாக இப்படம் இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறோம். தற்போது படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வரும் என்றார்.
மோகன் ஜி பேட்டி: இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், விஜய் அரசியல் வருவது குறித்த கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இயக்குநர் மோகன் ஜி, அவரின் அரசியல் வருகையை நான் அப்போதே வரவேற்றுவிட்டேன். நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜய் சாரும் தப்பான ரூட்டில் போவது தான் வருத்தமாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக இருக்கிறது.
விஜய் பயப்படுகிறார்: விநாயகர் சதுர்த்தி இந்துக்கள் பண்டிகையாகி விடுகிறது, அதற்கு வாழ்த்து சொன்னால், அது இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போல மாறிவிடும். ஏன் என்றால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது போல, ஒரு தோற்றம் வந்துவிடும் என்பதால், இந்துவாக இருக்கும் பலரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது வேறு, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது வேறு, இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலை முதலில் மாற வேண்டும் என்றார்.
சிவாஜி ஏஐ: தொடர்ந்த கோட் படம் குறித்து பேசிய அவர், தி கோட் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மகன் விஜய்யை விட அப்பா விஜய் தான் மிகவும் பிடித்து இருந்தது. வெங்கட் பிரபு சிறப்பாக படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்தை 'ஏஐ'யில் உருவாக்கியது உண்மையில் நல்ல விஷயம் அதே நடிகர் சிவாஜி கணேசனை ஏஐ-யில் உருவாக்க வேண்டும் என்பது என் ஆசை. அவரை மொத்த திரையுலகமும் மிஸ் செய்கிறது. அவரைப் போன்ற ஒரு நடிகர் இன்று இல்லை என மோகன் ஜி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











