காஷ்மீர் தாக்குதல்.. இந்த மத பிரச்சனை 14ம் நூற்றாண்டு முதல் இருந்தே இருக்கு.. மோகன் ஜி கொதிப்பு!
காஷ்மீர்: இந்தியாவில் கடைசியாக நடந்த தீவிரவாத தாக்குதல் என்றால் அது புல்வாமா அட்டாக் தான் என அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கும் போது, நேற்று அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இருக்கக்கூடிய பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் நடைபெற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று கள ஆய்வு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஆகியோருடன் ஆய்வு நடத்தினார்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டதால், பைசரன் பள்ளத்தாக்கு தற்போது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனாலும் 28 பேர் பரிதாப பலி, பலருக்கு காயம் என இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் ஊடகங்களிடம் கூறிய வார்த்தைகள் பலரையும் அதிர்ச்சி உள்ளாக்கியது. அதாவது, தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் அவரது பெயரைத் தெரிந்து கொண்டு, அவர்கள் முஸ்லிம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தீவிரவாத தாக்குதல்: ஒருவரை முஸ்லிம்கள் சொல்லும் மத போதகம் குறித்து கேட்டுள்ளார். அதைச் சொல்லாததால் அவரைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார் ஒருவர். இது மட்டும் இல்லாமல், தனது கணவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற பின்னர், தன்னையும் கொன்று விடுங்கள் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி தீவிரவாதிகளிடம் கெஞ்சி உள்ளார். ஆனால் தீவிரவாதிகளோ, இங்கு நடந்ததை போய் மோடியிடம் சொல் எனக் கூறியதாக பெண் ஒருவர் அழுது கொண்டே கூறினார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
மோகன் ஜி: இந்நிலையில் இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில், " நீ இஸ்லாமியன் இல்லை என்றால், உன்னை கொடூரமாக கொல்லுவேன் என்பது இன்றைய சிந்தனை அல்ல.. சுமார் 14ம் நூற்றாண்டு முதல் பாரதத்தில் நடந்து வரும் கொடூர சிந்தனை.. இப்படி சிந்திப்பவர்களை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள், இப்படி சிந்திப்பவர்களை விட ஆபத்தானவர்கள்.." என பதிவிட்டுள்ளார்.

பிரிவினைவாதம்: மோகன் ஜியின் ஆதங்கம் புரிகிறது என்றால், அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் என்பது, இந்தியாவில் உள்ள மொத்த இஸ்லாமிய மக்களையும் விரோதிகளாக மாற்றும் போக்கு உள்ளது. இந்தியா சுதந்திரமடைந்த கால கட்டத்தில் இருந்து காஷ்மீர் பகுதியில் பிரிவினை வாதத்தை முன் வைக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்காக இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்களை பிரிவினைவாதிகளாக மாற்றுவது என்பது வெறுப்பு அரசியலின் ஒரு பகுதி தானே தவிர வேறு இல்லை.
உள்நாட்டுப் போர்: மேலும் தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் கொல்வதற்கு முன்னர் நீ முஸ்லீமா, நீ இஸ்லாமியனா எனக் கேட்டு கேட்டு சுட்டு வீழ்த்தி உள்ளார்கள். தீவிரவாதிகளின் இந்த செயல் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இதனால் இயக்குநர் மோகன் ஜி மட்டும் இல்லாமல் பல இணையவாசிகளுமே இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகளை முன் வைத்து வருகிறார்கள். இப்படியானவர்களின் பதிவும் எண்ணமுமே, தீவிரவாதிகளின் சதி செயலுக்கான வெற்றியாக மாறிவிடக் கூடும். அதாவது, இதனால் இங்குள்ள இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை பெரும்பான்மையான மக்களாக உள்ள இந்துக்களும் அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் செய்தார்கள் எனில் அது, இந்தியாவின் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் உள்நாட்டு போர் எழுவதற்கான சாத்தியக் கூறுகளாக மாறிவிடும். இந்தியா போன்ற நாட்டில் அது சாத்தியமில்லை என்றாலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் கவனமாக செயல்படுவது முக்கியமானது என்பதை இயக்குநர் மோகன் ஜி உள்ளிட்ட பலரும் உணர வேண்டியது முக்கியம்.


Click it and Unblock the Notifications











