Pahalgam Attack: மேம்போக்காக இஸ்லாமியர்கள் மீது விஷமத்தை தூவுகிறாரா மோகன்ஜி? வெளுக்கும் இணையவாசிகள்!
காஷ்மீர்: மொத்த இந்தியாவும் தற்போது பேசிக்கொண்டு இருப்பது காஷ்மீர் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் சுடப்பட்டு, கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரையும் தேடிப் பிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தாக்குதலின் போது தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் முஸ்லிமா அல்லது வேறு மதத்தைச் சேர்ந்தவரா எனத் தெரிந்து கொண்டு, முஸ்லிம் அல்லாதவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளார்கள் என்று, அங்கிருந்து தப்பித்தவர்கள் கூறுகிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த விஷயத்தை பலரும் இணையத்தில் வேகமாக பரப்பினர். இப்போதும் பரப்பி வருகிறார்கள். இந்த தகவலை பரப்புபவர்கள், மொத்த இஸ்லாமியர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள். குறிப்பாக இந்தியா மதச்சார்பின்மை நாடாக இருப்பதால்தான் இந்த பிரச்னை. இந்தியாவுக்கு என ஒற்றை மதம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சில கூறுகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, திரைப் பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து மிகவும் மேம்போக்கு தனமாக இருப்பது மட்டும் இல்லாமல், இஸ்லாமியர்கள் மீது விஷமத்தை பரப்பும் விதமாக உள்ளது. அதாவது மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில், " நீ இஸ்லாமியன் இல்லை என்றால், உன்னை கொடூரமாக கொல்லுவேன் என்பது இன்றைய சிந்தனை அல்ல.. சுமார் 14ம் நூற்றாண்டு முதல் பாரதத்தில் நடந்து வரும் கொடூர சிந்தனை.. இப்படி சிந்திப்பவர்களை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள், இப்படி சிந்திப்பவர்களை விட ஆபத்தானவர்கள்.." என பதிவிட்டுள்ளார்.

வன்மம்: இந்த சம்பவம் தொடர்பாக மோகன்ஜி தனது ஆதங்கத்தை, வருத்தத்தை வெளிப்படுத்துவதில் தவறு என்று யாரும் கூற முடியாது. ஆனால் அவரது இந்த எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள 'நீ இஸ்லாமியன் இல்லை என்றால், உன்னை கொடூரமாக கொல்லுவேன் என்பது இன்றைய சிந்தனை அல்ல.. சுமார் 14ம் நூற்றாண்டு முதல் பாரதத்தில் நடந்து வரும் கொடூர சிந்தனை' இந்த வார்த்தைகள் மிகவும் விஷமத்தனமான மற்றும் ஆபத்தை உண்டாக்குகிற சொற்கள். இது மறைமுகமாக இஸ்லாமிய மாமன்னன் பாபரை தாக்கும் வார்த்தைகள் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும். மோகன்ஜியின் இந்த பதிவுக்கு கண்டனங்கள் எழாமல் இல்லை. மோகன் ஜிக்கு இஸ்லாமியர்கள் மீது இவ்வளவு வன்மமா எனவும் கேள்வி எழுப்புகிறார்கள்.
பேசுபொருள்: பிரிவினைவாதத்தை விரும்புகிற காஷ்மீரில் இருக்கும் வெகு சொற்பமான இஸ்லாமியர்கள் மற்றும் அவர்கள் கையில் ஏந்தியுள்ள தீவிரவாதத்தை கண்டிக்காமல், மொத்த இஸ்லாமிய மக்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இவரது பதிவு, இந்தியாவின் மதச்சார்பின்மையை ஆபத்தில் நிறுத்தும் போக்கு என அவரது பதிவுக்கு கீழ் கண்டனங்கள் குவிகின்றன. மேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், இஸ்லாமியர் அல்லாதவர்களை தேடித் தேடிக் கொன்றுள்ளார்கள் என்பது பேசு பொருளாக மாறியுள்ளது.

விஷமம்: பேசு பொருளாக மாறியது மட்டும் இல்லாமல், மோகன் ஜி போன்ற எண்ணம் கொண்டோர் விஷமத்தனமான கருத்துக்களை தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பகிர்ந்தும் பரப்பியும் வருகிறார்கள். காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான். தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பதற்காக முயற்சி செய்து குண்டடிபட்டு இறந்த, குதிரை வண்டிக்காரர், ஆதில் ஹுசைன் இஸ்லாமியர் தான் என்பதை மறந்து விடக்கூடாது. மோகன்ஜி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்கள் குறித்தும், ஆதில் ஹுசைன் குறித்தும் பதிவிட்டுள்ளார். ஆனால் அவரது முந்தைய பதிவு முழுக்க முழுக்க விஷமத்தனத்தை பரப்புவதாக மட்டுமே கொண்டிருக்கிறது என்ற கண்டனங்கள் எழுகின்றன.

ஆண்ட்ரியா: இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பல திரைப் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ் திரையுலகில் பலரும் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் மிகவும் தெளிவான பார்வையுடன் இந்த தாக்குதலையும் அதை எதை நோக்கி நகர்த்துகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மோகன் ஜி போன்ற திரைப்பிரபலங்கள் இது போன்ற விஷயங்கள் குறித்து பேசும்போது மிகவும் தெளிவான அரசியல் பார்வையுடனும் இந்தியாவின் மதச்சார்பின்மை குறித்தும் கருத்தில் கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என பலரும் அவருக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











