Ajith: தல என்பதை தோனிக்கு விட்டுக்கொடுத்த அஜித்.. மரியாதை இல்லாமல் கூப்பிட முடியல மோகன் ஜி நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் அஜித்தைப் பார்த்து தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்கள் பலர். தமிழ் சினிமா உலகிலேயே அவர் மீது வெறித்தனமான அன்பைப் பொழியக்கூடிய பிரபலங்கள் பலர் உள்ளனர். அவரது தீவிரமான ரசிகர்கள் பட்டாளத்தில் ஒருவர்தான் இயக்குநர் மோகன் ஜி. அஜித் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் பார்த்த பின்னர் அவர் அஜித் குறித்து பேசியது அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி நேற்று ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் படம் வழக்கமான அஜித் படங்கள் போல் இல்லை என்பதால், ரசிகர்களில் சிலர் பெரும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி படம், அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போனதால், மகிழ் திருமேனியுடன் இணைந்து இன்னொரு படம் செய்ய அஜித் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அஜித் தமிழ் சினிமாவில் கொஞ்சம் வித்தியாசமான நடிகர். அதாவது ரசிகர் மன்றத்தை கலைத்தது தொடங்கி, தன்னை அல்டிமேட் ஸ்டார் என்றோ, தல என்றோ யாரும் அழைக்க வேண்டாம். ஏ.கே. அல்லது அஜித் குமார் என்று அழையுங்கள், அதுவே போதும் எனத் தெரிவித்தார். சமீபமாக ரசிகர்கள் கடவுளே.. அஜித்தே என கோஷமிட்டதைக் கூட, வேண்டாம் எனக் கூறி, அறிக்கை விட்டிருந்தார்.

தல: இப்படியான நிலையில் இயக்குநர் மோகன் ஜி இது குறித்து பேசுகையில், " இடையில் தல என்று கூப்பிட வேண்டாம் என கூறிவிட்டார். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து, அவரைப் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். மெக்கானிக் ஷாப்பில் இருந்து, கார் ரேஸிங் இண்டஸ்ட்ரியில், இன்றைக்கு இந்தியாவையே பெருமை அடையச் செய்துள்ளார். இடையில் தன்னை தல என்று கூப்பிட வேண்டாம் என அறிக்கை விட்டிருந்தார். தோனியைத் தல எனக் கூப்பிடுகின்றார்கள் என்ற பிரச்னை இருந்தது. மறுபடியும் அவரை நாங்கள் தல என்று கூப்பிடப்போகின்றோம்.

அஜித் - தோனி: தோனி ஸ்போர்ட்ஸில் இருந்ததால், அவரை தல எனக் கூப்பிட்டதால் அஜித் அதை விட்டுக் கொடுத்துவிட்டார். இப்போது அஜித்தும் இந்தியக் கொடியை தோளில் போட்டுக் கொண்டு வந்து நிற்கிறார். அவரை நாங்கள் மீண்டும் தல என்று கூப்பிடப்போகின்றோம். அஜித் சார் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களால் அவரை ஏ.கே, அஜித் குமார் என மரியாதை இல்லாமல் கூப்பிடமுடியவில்லை" என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

கோரிக்கை: தான் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோகன் ஜி, "நீஙக் எங்களுக்கு எப்பவுமே தல தான். தயவு செய்து இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அஜித் குமார் எனக் கூறுவதை விடவும் தல என்று கூறுவதுதான் சந்தோஷமாக உள்ளது" என கேப்ஷன் இட்டுள்ளார். அவரது இந்தப் பேச்சும் பதிவும் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications











