உன் தலைவரும் அப்போ கூத்தாடி தான்.. விஜய்க்காக வரிந்துக்கட்டிய மோகன். ஜி.. என்ன நடக்குது!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்தப் புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. முதலில் இதில் விசிக தலைவர் திருமாவளவனும், விஜய்யும்தான் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் கலந்துகொள்ளவில்லை. விஜய் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கும் அவர்; அ.வினோத் இயக்கத்தில் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார். தளபதி 69 என்று தற்காலகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சினிமாவிலிருந்து விஜய் ஒதுங்குவது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்டை கொடுத்தாலும்; அவர் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

களைகட்டிய மாநாடு: அண்மையில் விக்கிரவாண்டியில் வைத்து தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார் விஜய். இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். அப்போது தங்கள் கட்சியின் கொள்கை என்ன?; யார் அரசியல் எதிரி என்பது குறித்தெல்லாம் வெளிப்படையாக பேசினார் விஜய். அதிலும் திமுகதான் தமிழ்நாட்டில் தங்களின் அரசியல் எதிரி என்பதை பிரகடனப்படுத்தினார். அன்றிலிருந்து விஜய் தொண்டர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே பகை உருவாகிவிட்டது.
சந்தித்த விமர்சனம்: மாநாட்டுக்கு பிறகு ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுத்தார். ஆனால் களத்தில் சென்று அதனை வழங்காமல் மக்களை பனையூரில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து வழங்கினார். அது மிகப்பெரிய அதிருப்தியையும், விமர்சனத்தையும் சந்தித்தது. அதுமட்டுமின்றி அரசியல் முதிர்ச்சியற்றவர் என்பதை விஜய் இதில் நிரூபித்துவிட்டார் என்று அவருக்கு எதிர் நிலையில் இருப்பவர்கள் பேச தொடங்கினார்கள்.
புத்தக வெளியீட்டு விழா: சூழல் இப்படி இருக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். முதலில் இந்தப் புத்தகத்தை திருமாவளவன் பெற்றுக்கொள்ள விஜய் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் திமுகவை தொடர்ந்து தாக்கியதால் இந்த நிகழ்ச்சியில் விஜய்யுடன் பங்கேற்க மறுத்துவிட்டார் திருமாவளவன். இதனையடுத்து விஜய் மட்டும் நேற்று கலந்துகொண்டார்.
இங்கும் திட்டுதான்: புத்தகத்தை வெளியிட்டுவிட்டு பேசிய விஜய், திமுகவை இந்த மேடையிலும் கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுகவின் கட்டுப்பாட்டில் திருமாவளவன் இருக்கிறார் அதனால்தான் அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்கிற தொனியில் பேசினார். இதனால் விசிகவினரும் கொந்தளித்திருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க விசிகவை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் தனியார் ஊடகம் ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கொதிப்புடன் விஜய்யை விமர்சித்த அவர் கூத்தாடி என்று கூறினார்.
களத்தில் குதித்த மோகன் ஜி: இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கூத்தாடி. எவ்வளவு திமிர் இவருக்கு. இவர் வகிக்கும் கட்சியின் தலைவரே ஒரு படத்தில் கூத்தாடி வேடம் போட்டவருதான். இந்த வார்த்தைக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் ஷாநவாஸ் அவர்கள். இது திரை நடிகர்களை மட்டுமில்லை நம் கிராமத்து கூத்து கலைஞர்களையும் இழிவுப்படுத்தும் வார்த்தை" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவர் ஏன் சம்பந்தமே இல்லாமல் இதில் வருகிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











