மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க! நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப? பா.ரஞ்சித்தை அட்டாக் செய்த மோகன் ஜி!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர்களின் படங்கள் சித்தாந்த ரீதியாகவே எதிர்ரெதிராக உள்ளது. இதனாலே இவர்கள் இருவரிடையே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் குறித்து மற்றொருவரிடம் கேள்வி எழுப்பினால் அதனைத் தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பா. ரஞ்சித் பெயரைக் குறிப்பிடாமல் மோகன்.ஜி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அதாவது ஜூலை 20ஆம் தேதி நினைவேந்தல் பேரணி ஒன்றினை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நினைவேந்தல் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நினைவேந்தல் நிகழ்வில் பேசிய பா.ரஞ்சித் ஆளும் திமுக அரசின் மீதும் திமுகவில் இருகக்கூடிய தலித் எம்.பி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மேயர்கள் மீதும் மிகவும் காட்டமாக விமர்சனங்களை முன்வைத்தார்.
நாங்கள் ரௌடிகள்தான்: சமூகநீதி குறித்து பேசும் திமுக அரசு சென்னையைக் கட்டி ஆண்ட தலைவருக்கு சென்னைக்கு வெளியே புதைக்க இடம் கொடுக்கீன்றீர்கள். இதுதான் உங்களின் சமூக நீதியா? திமுக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும். ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொல்லப்பட்ட பின்னர், முதலில் பாஜகவினர் இணையத்தில் ஆம்ஸ்டாங் அண்ணனை ரௌடி என எழுகின்றார்கள். அதன் பின்னர் ஒட்டுமொத்த திமுகவின் ஐ.டி. விங்கும் இணையத்தில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரௌடி என எழுதுகின்றார்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பினால் அவர்களை ரௌடிகள் என்பீர்கள் என்றால் நாங்கள் அனைவரும் ரௌடிகள்தான்.
எங்களை மீறி: ஆம்ஸ்ட்ராங் அண்ணன் சென்னையைக் கட்டி ஆண்டவர். அவரை மீறி சென்னையில் எதுவுமே நடக்காது. சென்னையில் 40 சதவீதம் பேர் தலித்துகள். எங்களை மீறி சென்னையில் எதுவும் நடக்காது. மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. இது ஒரு எச்சரிகை. நான் கோபத்தில் பலமுறை அவரைச் சந்தித்தபோது கூட, அவர் என்னை ஒருநாளும் வன்முறையை நோக்கி வழிநடத்தியதில்லை. நான் கோபமாக அவரிடம் பேசப் போகும்போது,’சார்.. உங்க வேலை என்ன? போய் படம் பண்ணுங்க போஙக’ என அனுப்பி விடுவார்.
வன்முறை: அவர் ஒருநாளும் வன்முறையை நோக்கி எங்களை நகர்த்தியதே கிடையாது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கூட வன்முறை நிகழ அதிக வாய்ப்புள்ளது என எழுதுகின்றார்கள். இவ்வாறு எழுதுவதன் மூலம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் மனதில் பயத்தை உருவாக்க நினைக்கின்றார்கள். ஆனால் ஒரு வன்முறைச் சம்பவம் கூட நிகழவில்லை. நாங்கள் அம்பேத்கரின் மாணவர்கள்” என பேசியிருந்தார்.
மோகன் ஜி: இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி, தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ”என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற” என பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











