Mysskin: சூர்யாவை கருணையோடு பாத்துக்கங்க.. ரசிகர்களிடம் வேண்டிய இயக்குநர் மிஷ்கின்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசான நிலையில் படம் குறித்து கலவையான விமர்சனங்களே கிடைத்தன. படம் வசூலிலும் சொதப்பிய நிலையில் சமூக வலைதளங்களில் இந்த படத்தையும் நடிகர் சூர்யாவையும் பலரும் வறுத்தெடுத்தனர்.
அடுத்தடுத்த தோல்விகளால் துவண்ட போதிலும் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இதையடுதது ஆர்ஜே பாலாஜி இயக்கத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா குறித்து பிரபல இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியொன்றில் பேசியுள்ளார். சூர்யா போன்ற கலைஞர்களை, நடிகர்களை ரசிகர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சூர்யா: மிகுந்த மெனக்கெடல்களுடன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா. பல ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சூர்யா சாக்லேட் பாயாக தன்னுடைய பயணத்தை துவங்கி தற்போது அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்து வருகிறார். எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இடைவெளியில் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி கங்குவா படம் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். வரலாற்று பின்னணியில் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கங்குவா படம்: சர்வதேச அளவில் பத்திருக்கும் மேற்பட்ட மொழிகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ய தவறியுள்ளது. முதலுக்கே மோசம் என்ற வகையில் இந்த படத்தின் வசூல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை அதிகமான எதிர்பார்ப்புடன் பார்த்த ரசிகர்கள் வெளியில் வந்து படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வறுத்தெடுத்ததை பார்க்க முடிந்தது. அந்த வகையில் கங்குவா படம் சமூக வலைதளங்களிலும் அதிகமான கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று ப்ரோமோஷனின்போது தயாரிப்பாளர் கூறியதும் அதிகமான விமர்சனங்களை பெற்றது.
மிஷ்கின் பேச்சு: நடிகர் சூர்யாவும் பல கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அவர்கள் தொடர்பாக அடுத்தடுத்து மீம்ஸ்களும் ஏராளமாக சமூக வலைதளங்களில் உலவின. இந்நிலையில் கங்குவா படம் குறித்து தற்போது இயக்குநர் மிஷ்கின், படநிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை தாண்டிதான் படத்தை பார்க்க வருவதாகவும் அவற்றை மீறி நாம் அவர்களை என்டர்டெயின் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் கொடுக்கும் அனுபவத்தில் அவர்கள் முன்பு கேமராவை நீட்டும்போது அவர்களும் ஒருசில வார்த்தைகளை பேசி விடுவதாகவும் மிஷ்கின் கூறியுள்ளார்.
சூர்யாவை கருணையோடு பார்க்க வேண்டும்: நடிகர்களை ரசிகர்கள் கருணையோடு பார்க்க வேண்டும் என்றும் மிஷ்கின் கேட்டுக் கொண்டுள்ளார். சூர்யா போன்ற நல்ல நடிகரை, அழகான நடிகரை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சிவாஜி போன்றவர்கள் நம்முடன் இல்லாத நிலையில் அவர்களுடன் பணியாற்றிய சிவக்குமார் நம்முடன் இருப்பதாகவும் அவர்கள் வீட்டில் இருந்து வந்த இரு குழந்தைகளையும் நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மிஷ்கின் கூறியுள்ளார். இதனால் தான் சூர்யாவிற்கு கதை சொல்லப் போகிறேனா என்ற கேள்வி எழும் என்றும் ஆனால் தான் அவருக்கு கதை சொல்லப் போவதில்லை என்றும் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
ராக்கெட் போன்றது சினிமா: ஒரு சிறப்பான படத்தை கொடுப்பதற்காக குடும்பத்தை மறந்துவிட்டு நடிகர்கள் செய்லபடுவதாகவும் அவர் கூறியுள்ளார். 24 மணிநேரமும் ஒத்த சிந்தனையுடன் 10 ஆண்டுகள் கடினமான முயற்சிக்கு பிறகே ராக்கெட் டிசைன் செய்யப்படும் என்று கூறியுள்ள மிஷ்கின் அதேபோல, தான் சினிமாவையும் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











