கங்குவாவை தொடர்ந்து கன்னட இயக்குநர் படத்தில் நடிக்கிறாரா சூர்யா?.. டைரக்டர் கொடுத்த விளக்கம்!
பெங்களூர்: தமிழ் சினிமா நடிகர்கள் தெலுங்கு இயக்குநர்கள் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது கன்னட இயக்குநர் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக நடிகர் விஜய்யின் படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் படத்தையும் அந்த நிறுவனம் தயாரிக்க போவதாகவும், பிரபல தெலுங்கு இயக்குநர் ஒருவர் அந்த படத்தை இயக்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

இந்நிலையில், இதுகுறித்து அந்த இயக்குநரிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம் வாங்க..
கங்குவா ரெடி: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூலை 23-ஆம் தேதி கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஃபயர் சாங் வெளியாகிறது. அந்த படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் கங்குவா படத்தில் நடித்துள்ளனர்.
சூர்யா 44: கங்குவா படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அந்தமானில் ஆரம்பிக்கப்பட்ட சூர்யா 44 திரைப்படம், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட இயக்குநர் படத்தில்: பாலிவுட்டில் கர்ணா என்கிற படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தப் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், கன்னட இயக்குநர் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், அது தொடர்பான விளக்கத்தை அந்த இயக்குநர் கொடுத்திருக்கிறார்.
மஃப்டி பட இயக்குநர்: சிம்பு நடித்து வெளியான பத்து தல படத்தின் கன்னட வெர்ஷனான மஃப்டி படத்தை இயக்கிய நர்த்தன் என்பவர் அடுத்ததாக மஃப்டி படத்தின் இரண்டாம் பாகத்தை சிவராஜ்குமாரை வைத்து இயக்கி முடித்துள்ளார். அந்த படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், நர்த்தன் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இயக்குநர் விளக்கம்: கேவிஎன் தயாரிப்பில் நர்த்தன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக வெளியான தகவல்களை தற்போது இயக்குநர் நர்த்தன் முழுவதுமாக மறுத்துள்ளார். அதுபோன்ற எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இது சோஷியல் மீடியாவில் சிலர் கொளுத்திப் போட்ட வதந்தி தான் என்றும் இப்போதைக்கு மஃப்டி படத்தின் 2ம் பாகமான பைரதி ரனகல் படத்தின் மீதுதான் தனது முழு கவனமும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
வாடிவாசலும் அவ்வளவு தானா?: சுதா கொங்கராவின் 'புறநானூறு' படத்தில் இருந்து சூர்யா முழுவதுமாக வெளியாகி என்ஓசியே கொடுத்து விட்டார் என்றும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர். சூர்யா 44 படத்தை முடித்து விட்டுத்தான் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











