எங்க ஊருல உங்களுக்கு பேரு ‘ஊலப்பிலிமு’; LOL காமெடியன்களை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்!
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் மற்றும் மாயா ஆகியோர் வெளியிட்ட காமெடி வீடியோவிற்கு மூடர்கூடம் இயக்குநர் நவீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களின் பேச்சு மொழியை கிண்டல் செய்யும் வகையில் இருவரும் இணைந்து அந்த வீடியோவை போட்டுள்ளனர்.
அமேசான் பிரைமில் வெளியான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியில் அபிஷேக் டைட்டிலை வென்ற நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான விவேக்கின் கடைசி ஷோவான LOL நிகழ்ச்சியில் அபிஷேக் மற்றும் மாயா இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

டைட்டில் வின்னர்
அமேசான் பிரைமில் ஒளிபரப்பான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடிகளை கூறி அசத்திய அபிஷேக் அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் 10 லட்சம் ரூபாய் பரிசையும் தட்டிச் சென்றார். தொடர்ந்து விஜய் டிவியின் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

விவேக்கின் கடைசி ஷோ
நடிகர் விவேக்கின் கடைசி ஷோவான LOL எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியிலும் அபிஷேக் போட்டியாளராக கலந்து கொண்டார். அவருடன் ஸ்டாண்ட் காமெடியனான மாயாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், LOL டைட்டிலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தட்டிச் சென்றார்.

இருவரும் இணைந்து
இந்நிலையில், ஸ்டாண்ட் அப் காமெடியன்களான அபிஷேக் மற்றும் மாயா இருவரும் இணைந்து உருவாக்கிய சென்னை ஸ்லாங் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் அதை ரசித்து பார்த்து சிரித்தாலும், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தவறவில்லை.

சென்னை ஸ்லாங்கை கலாய்த்து
ஏப்ரல் மாதத்தை ஆப்ரல் என்று சென்னை மக்கள் பேசுவதாக ஆரம்பிக்கும் அந்த வீடியோவில் ஸ்டேஷன், ஜெராக்ஸ், சச்சின் டெண்டுல்கர், தோனி, பேப்பர், ஜீரோ உள்ளிட்ட பல வார்த்தைகளை சென்னை மக்கள் இப்படித்தான் பேசுகின்றனர் என கேவலப்படுத்தும் தொனியில் இருவரும் காமெடி என்கிற பெயரில் செய்துள்ள அலம்பலை இயக்குநர் நவீன் கடுமையாக கண்டித்துள்ளார்.
இங்கிலிஷ்காரன் என்னிக்காவது
"இங்லீஸ்காரன் என்னிக்காவது வேற மொழிய சரியா உச்சரிச்சிருக்கானா? அவவென் நாக்கு எப்படி பழகிருக்கோ அப்படித்தாண்டா உச்சரிப்பு வரும். நீங்க மொக்கயா ஒரு எக்ஸ்பிரஷன் குடுக்கறிங்கல்ல, அதுக்கு பேருதான் மேட்டுக்குடி பூஷ்வாத்தனம். எங்க ஊருல உங்களுக்கு பேரு #ஊலப்பிலிமு" என வெளுத்து வாங்கி உள்ளார்.

ஊலப்பிலிமு
மூடர்கூடம், அலாவுதினும் அற்புத கேமராவும் மற்றும் அக்னிச் சிறகுகள் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் நவீன் காமெடியன்கள் அபிஷேக் மற்றும் மாயா குறித்து "ஊலப்பிலிமு" என வெளுத்து வாங்கியதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிறரை கொச்சைப்படுத்துவது தான் நகைச்சுவை என நினைத்துக் கொண்டு இவர்கள் இருப்பதால் தான் காமெடி சரியாகவே வரவில்லை என கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











