கோலமாவு கோகிலா படத்தை ஆலியா பட்டை வைத்து ரீமேக் செய்ய நினைத்தேன்.. நெல்சன் திலீப்குமார் ஓபன்!
சென்னை: இயக்குனர் நெல்சன் திலிப்குமாருக்கு தமிழில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றுக் கொடுத்த படம் கோலமாவு கோகிலா. முதல் படத்திலேயே நடிகை நயன்தாராவை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி இந்த படத்தை ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்திருந்தார் நெல்சன்.
கோலமாவு கோகிலா படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் மாஸ் காட்டியது. இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் குறித்து தற்போது நெல்சன் திலீப் குமார் பேசியுள்ளார். இந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய நினைத்ததாகவும் ஆனால் அடுத்தடுத்து டாக்டர், பீஸ்ட் என படங்களில் கமிட்டானதால் அது நடக்காமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்திலேயே நயன்தாராவை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை பச்சக் என்று சரியாக பற்றிக் கொண்டு, மிகச்சிறப்பான படத்தை கொடுத்திருந்தார். நயன்தாராவுடன் சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்த படம் வெற்றிப்பட பட்டியலில் இடம் பெற்றது. படத்தில் நயன்தாராவின் இயல்பான நடிப்பு மற்றும் யோகிபாபுவின் ஒரு தலை காதல் உள்ளிட்டவை மிகப்பெரிய கவனத்தை பெற்றன.
மிகப்பெரிய ஓபனிங்: தன்னுடைய அம்மாவின் உடல் நலத்திற்காக கடத்தல் தொழிலை மேற்கொள்ளும் நயன்தாரா மற்றும் குடும்பத்தினரை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் நெல்சன் திலீப்குமாருக்கு மிகப்பெரிய ஓபனிங்கை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட், தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் என அடுத்தடுத்த படங்களை மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து இயக்கியிருந்தார் நெல்சன் திலிப்குமார். இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் ரஜினிகாந்தை லீட் கேரக்டரில் வைத்து ஜெயிலர் 2 படத்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோலமாவு கோகிலா ரீமேக்: இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவர்களுடன் அவர் மேற்கொண்ட கலந்துரையாடலில் அவரிடம் அடுத்தடுத்த படங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் ஜெயிலர் 2 படம் குறித்த கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நெல்சன் திலீப்குமார், இதுகுறித்து புரொடக்ஷன்ஸ் தரப்பில் தான் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தான் அறிவிப்பார்கள் என்றும் பதில் கூறியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தை பாலிவுட்டில் தான் ஆலியா பட்டை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அடுத்தடுத்து டாக்டர், பீஸ்ட் என படங்களில் தான் பிஸியாகி விட்டதால் இந்த படத்தை தான் நினைத்தபடி எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நெல்சனின் திட்டம்: கோலமாவு கோகிலா படத்தை போன்று பெண்ணை மையமாக வைத்து படமியக்கும் திட்டமும் உள்ளதாகவும் அதுபோன்ற வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக இது நடக்கும் என்றும் நெல்சன் திலீப்குமார் மேலும் கூறியுள்ளார். நயன்தாரா, யோகிபாபு லீட் கேரக்டர்களில் நடித்திருந்த கோலமாவு கோகிலா படம் பாலிவுட்டில் ஜான்வி கபூர் நடிக்க உருவாகியிருந்தது. ஆனால் இந்த படம் தமிழில் வெற்றி பெற்றதை போல இல்லாமல் பாலிவுட்டில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சொதப்பியது.


Click it and Unblock the Notifications











